துவாபரயுகத்தில் நடைபெற்ற மகாபாரதத்தின் மையமாக அஸ்தினாபுரம் இருந்தது. அதுவெளியுலக மகாபாரதத்தையும் அஸ்தினாபுரம் என்ற சாம்ராச்சியத்தையும் குறித்தது போன்று ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் நுண் மகாபாரதம் நடைபெறுவதாகவும் அங்கு அஸ்தினாபுரம் என்பது மனித உடலைக் குறிப்பதாக பகவான் கூறுகிறார்.
அஸ்தி என்ற சொற்தொடர் உடலிலுள்ள எலும்பைக் குறிப்பதாகவும் புரம் என்று குறிப்பிடப்படுவதே உடல் என்றும் கூறும் பகவான், எலும்பாலும் தசையாலுமான இவ்வுடலை அஸ்தினாபுரத்துக்கு ஒப்பிடுகிறார்.
உடலினுள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நுண் மகாபாரத அஸ்தினாபர நிகழ்வு போல், ஒவ்வொரு மனிதருள்ளும் நுண் பிரபஞ்சம், நுண் ஆகாயம் என்பன இயங்கிக் கொண்டி ருப்பதாகவும், இது "சூட்சுமஹிருதய ஆகாசம்" என்றும் பகவான் கூறுகிறார்.
சூட்சும ஆகாயத்தில் புத்தி அதாவது அறிவுதான் சூடசும சூரியன் எனவும் ஹிருதயம் தான் சூட்சும ஆகாயம் என்றும் பகர்கிறார்.
மேலும், ஹிருதயம் எனபது தசையாலான உடல் உறுப்பைக் குறிப்பிடவில்லையென்றும் அது உடலை இயக்கும் ஆன்மாவுடன்
தொடர்பானது என்றும் விளக்கமளிப்பதுடன், அங்கு அறிவு (புத்தி) என்ற சூட்சும சூரியன், சூட்சும சந்திரன் எனப்படும் அன்பு (பிரேமை) என்பன இருப்பதையும் விளக்குகிறார்.
அஸ்தினாபுரத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பவமும் நமது உடலினுள்ளே சூக்கும நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்.
ஒவ்வொருவரிலும் நற்குணங்களும் கெட்ட குணங்களும் அமைந்திருப்பதாகவும், நற்பண்புகள் மாத்திரமோ கெட்ட பண்புகள் மாத்திரமோ எந்தவொரு மனிதரிலும் இருப்பதில்லை என்று கூறும் எம்பிரான், மகாபாரதத்தின் பார்வையற்றவரும் தீய குணங்களைக் கொண்ட துரியோதனன், துச்சாதனன் ஆதியோரின் தந்தையான திருதராஷ்டிரனை மனித மனதின் தீய எண்ணங்களின் வடிவமாகவம், அவரது தம்பியும் தர்மத்தைக் கடைப்பிடித்த பாண்டவர்களின் தந்தையான பாண்டுவை மனித மனதின் நற்குணத்துக்கும் ஒப்பிடுகிறார்.
திருதராஷ்டிரன் பார்வை அற்றவராகவும், அதிக ஆசை பாசங்களுக்கு இடமளித்து, தவறான பாபகரமான செயல்களில் ஈடுபட்ட தனது புத்திரர்களின் பக்கமே எப்பொழுதும் பக்கச் சார்பாகவே நடந்தததைப் போன்று தீய எண்ணங்களைக் கொண்ட மனதின் பகுதியில் தோன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தீய குணங்களை நோக்கிச் செல்லும் புலன்களைக் கட்டுப்படுத்தாமல் அவை செல்லும் பாதையிலேயே சென்று மனிதனைப் பாபத்தில் தள்ளுவதாகவும் கூறுகிறார்.
மேலும் சத்தியம், தர்மம், அமைதி, அன்பு. அகிம்சை ஆகிய குணங்களைக் கொண்ட ஐந்து புத்திரர்களைப் பெற்றுத் தானும் தர்மநெறிகளும் தியாகமும் நிறைந்தவரான பாண்டுவை, ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்தபடி நற்செயலில் ஈடுபடும் மனதின் பகுதிக்கும் எம்பெருமான் ஒப்பிடுகிறார்.
இவ்வாறு நமது மனதினுள் நற்பண்புகளும் தீயபண்புகளும் இருப்பதால் இக்குணங்களுக்கிடையே தொடர்ந்தும் போட்டி நடைபெற்றுக்
கொண்டிருப்பதாகவும் கூறும் பகவான், மனிதன் பிறக்கும்போதான குழந்தைப்பருவம் தெய்வீக நிலையிலிருப்பதாகவும் புலனறிவு அதிகரிக்கும்போது புலன்களின் கட்டுப்பாடு அதிகரிப்பதால் அப்புலன்கள் நல்வழிகளிலும் தவறான வழிகளிலும் மனநதைச் செலுத்த ஆரம்பிக்கின்றது என்றும் கூறுகிறார்.
எனவே குழந்தைப்பருவத்து உடல் தர்மசேத்திரமாக இருப்பதாகவும், வயது முதிரும்போது உடல் குருச்சேத்திரமாக மாறிவிடுவதாகவும் பகவான் ஒப்பிட்டுக் கூறுகிறார்.
மேலும், மகாபாரதப்போர் 18 நாட்களில் முடிவடைந்தது மாத்திரமன்றி 18 அக்குரோணிச் சேனைகளும் 18 நாட்களில் அழிந்தபோதிலும் மனித மனதில் நடைபெறும் சூட்சுமப் போரானது வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவும் கூறுகிறார்.
"சமஸ்தலோகா சுகினோ பவந்து"
ஓம் ஸ்ரீ சாயி ராம்.