Thursday, December 31, 2020

நமக்குள் இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமே நமது அமைதிக்கான வழியாகும்

அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்படுகிறோம், சங்கடப்படுகிறோம், அவமானப்படுகிறோம். நமது கோழைத்தனமும் தன்னைத் தானே பழித்துக்குள்ளுதலும் தெய்வீகத் தன்மையல்ல. நமது அடிப்படை இயல்பு தெய்வீகமாகும். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள புத்தியையும், வலிமையையும் வைத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாமெல்லாம் பள்ளிக்கூடத்திலும் கல்லூரிகளிலும் படிக்கிறோம். ஒரு கால கட்டத்தில் அந்தப் படிப்புமுடிந்து, பட்டம்பெற்று வெளியுலகிற்குச் செல்கிறோம். பட்டம் பெற்றபின் கல்விச்சாலைகளும் கல்லூரிகளும் நமக்குத் தேவை இல்லை. இதைப்போலவே உலகம், வாழ்க்கை பற்றிய உண்மையை நாம் உணர்ந்தவுடன் வீடுபேறு கிடைத்துவிடுகிறது. அதற்குப் பிறகு இந்த வாழ்க்கை நமக்குத் தேவையில்லாமல் போகிறது. நாம் பட்டத்தைப் பெற்றே ஆகவேண்டும். நாம் தேர்ச்சி பெறுவதற்குரிய முயற்சியை முறையாக எடுத்துகொள்ளவேண்டும். நம்முடைய முயற்சியில் கவனம் செலுத்தாமல், இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தால் நமக்குப் பலன் ஏதும் கிடைக்காது. நாம் நம்மைச் சீர்படுத்திக்கொண்டால் மட்டுமே நமக்கு வீடுபேறு கிடைக்கும். ஒரு வங்கியில் ஒருவர் கணக்கு வைத்துக்கொண்டிருந்தால் அக்கணக்கிலிருந்து அவர் மாத்திரமே பணம் எடுக்க முடியும். மற்றவர்கள் அந்தப் பணத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களது கணக்கு நமக்குப் பயன்தராது. இன்றும் கூட இமாலயத்தில் சிறந்த துறவிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கிறார்கள். அவர்களது பிரேமை இந்த மனித சமுதாயம் அனைத்தையும் அரவணைக்கிறது. நீங்கள் சரியான பாதையிலே பயணம் செய்து உங்களுடைய முயற்சியின் மூலம்தான் வீடுபேறு அடைய வேண்டும். துறவிகள் உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கலாமே தவிர, முயற்சி உங்களுடையதாகவே இருக்க வேண்டும். நெடுந்தூரத்திலிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் வீட்டுக்குத் திரும்பச் செல்ல வேண்டும். அதுதான் சரியாதனதாகும். அதைப்போலத்தான் பிறப்பு வாயிலாக நாம் நமது பயணத்தை எங்கு தொடங்கினோமோ அதே இடத்திற்கு மீண்டும் நாம் செல்லத்தான் வேண்டும். அது தவிர்க்க இயலாத ஒன்றாகும். அந்த இடமே இறைவனாகும். ஒரேஒரு சூரியன்தான் உள்ளபோதிலும் அவர் கோடிக்கணக்கான குளங்கள், கிணறுகள், பானைகள் போன்றவற்றுள் பிரதிபலிக்கிறார். அதைப்போலத்தான் நல்ல மனதுடைய தனி மனித ஜீவிகள் இறைவனுடைய பிரதிபலிப்பாக இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளேயும் ஆத்மா இருக்கிறது. இங்கு லட்சக்கணக்கான் மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் இதயத்துக்குள்ளும் சுவாமி பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். இதுவே உண்மையான ஆத்மாநந்தமாகும். அதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படி நமக்குள் இறைவன் இருக்கிறார் என்ற எண்ணத்தைக் கொண்டுவந்துவிட்டால் அதுவே நமது அமைதிக்கான வழியாகும்.

Wednesday, December 30, 2020

மனிதர்களுக்குத் தியாகம் மிக அவசியம். தியாகம் யோகத்தை அளிக்கும்.

அன்பின் திருவுருவங்களே, நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கிறேன். என்னைப் பின்பற்றி நடவுங்கள். கடவுள் உங்களுக்கு எபொழுதும் உதவி புரியவே உங்களைச் சுற்றிச் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். கடவுள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பக்கபலமாக இருந்து நமக்கு நிலையான ஆனந்தத்தை அளித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் நாம் எக்காரணத்தைக் கொண்டும் மனத்தளர்ச்சி அடையலாகாது. உண்மையைச் சொல்லப்போனால் மனிதன் மனைதனேயல்ல. மனிதன் தெய்வமே. உடல்மீது பற்றுக் கொள்ளாதீர்கள். உடலைக் கடவுள் தந்த கருவியாக மாத்திரமே உபயோகித்துக் கடமையாற்றுங்கள். கடமையாற்றுவதற்கே உடல் வழங்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் நுழைந்து சேவை செய்யுங்கள். சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடுங்கள். திக்கற்றவர்கள் மற்றும் துயரப்படுபவர்களின் துயரைத் துடைக்கச் சேவை செய்யுங்கள். கடவுளிடம் எக்காரணம் கொண்டும் வெறுப்புக் கொள்ளாதீர்கள். கடவுளை நேசியுங்கள். உங்களுக்குப் பிடிக்காதவரொருவரை வழியில் சந்திக்க நேரும்போது அவரிடம் வெறுப்பாகப் பேசினால், அவரும் வெறுப்படைந்து நிலமை மோசமாகும். ஆனால் அவரிடம், நண்பரே, எப்படியிருக்கிறீர்கள் என்று அன்போடு விசாரித்தால் அவரிடமிருக்கும் வெறுப்புக் குறையும். நல்லெண்ணம் ஏற்படும். நல்லுறவும் ஏற்படும். மனிதர்களுக்குத் தியாகம் மிக அவசியம். தியாகம் அல்லது நற்குணங்கள் அல்லாதவற்றைத் துறத்தல் யோகமாகும். மாறாகப் போகம் இச்சைக்கு வழிவகுக்கும். தியாகம் யோகத்தை அளிக்கும். போகம் வியாதிக்கு வழிவகுக்கும். தியாகம் யோகமாகும். போகம் வியாதியாகும். எனவே ஒவ்வொரு மனிதரும் எப்பொழுதும் கடவுள் சிந்தனையுடன் செயல்புரியவேண்டும்.

Tuesday, December 29, 2020

satya sai baba movie part 1

satya sai baba movie part 6

கடவுளை நம்புவோம். கிடைத்தற்கரிய இந்த மானிட வாழ்க்கையைப் புனிதமாகப் பயன்படுத்துவோம்.

“ அன்பின் திருவுருவங்களே, நம் மனம் தூய்மையாக இருக்கவேண்டுமென்றால் நல்லோர் சேர்க்கையை நாடவேண்டும். ஆனால் சில சமயங்களில் நல்லது தீயதாகவும், தீயது நல்லதாகவும் தென்படுகிறது. யார் நல்லவர் யார் தீயவர் என்று பிரித்தறிவது மிகவும் கடினம். நல்ல கலாச்சாரம், நல்ல நடத்தை, நல்ல வார்த்தைகளைக் கொண்ட இனிமையான பேச்சு, நன்முயற்சிகள் என்பவை ஒரு மனிதர் நல்லவர் என்று நமக்கு அடையாளம் காட்டுகின்றன. மனிதர்கள் ஆனைவருக்கும் நற்கலாச்சாரம் மிக அவசியம். நற்கலாச்சாராம் தீய குணங்களை அகற்றி நல்ல குணங்களை வளர்க்கிறது. அனைத்தும் தெரிந்திருந்தும் தெரியாதது போல் இருப்பதும், உரிய நேரத்தில், பக்தர்களுக்குத் தான் எல்லாம் அறிந்தவர் என்பதை உணர்த்தி நல்வழிப்படுத்துவதும் கடவுளின் திருவிளையாடல். கடவுளை நம்புவோம். கிடைத்தற்கரிய இந்த மானிட வாழ்க்கையைப் புனிதமாகப் பயன்படுத்துவோம். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றையும், HELP EVER , HURT NEVER என்ற கொள்கையையும் கடைப்பிடிப்போம்.”

Monday, December 28, 2020

இறைவன் நம்முள் இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை.

அன்பின் வடிவங்களே, தன்மீது நம்பிக்கை, கடவுளின்மீது நம்பிக்கை ஆகிய இரண்டுமிருந்தால் வாழ்க்கையில் எதைவேண்டுமானாலும் சாதித்து விடலாம். பயமற்று இருங்கள். எதற்கும் பயப்படாதீர்கள். சத்தியம் நம்முள் இருக்கும்பொழுது நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்? சத்தியம் எதைக்கண்டும் அஞ்சாது. வாய்மையே வெல்லும். இது ஆன்றோர் கூற்று. இந்தச் சத்தியத்தை அன்பின் வழியாக மட்டுமே அடைய முடியும். என்னுடைய உரைகளில் சத்தியத்தையும், அன்பையும் உரையின் ஆரம்பத்திலும், முடிவிலும் வலியுறுத்திக் கூறிவருகிறேன். ஏனென்றால் இவையிரண்டும் உயிருக்குச் சமமானவை. இவ்விரண்டும் மூச்சை உள்வாங்குவதும், வெளிவிடுவதும் போன்றது. இவ்விரண்டும் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது. அதாவது சோ……ஹம்…., இவற்றில் சோ…. உள்வாங்கும் மூச்சு. அது சத்தியம். ஹம் என்பது வெளிவிடும் மூச்சு. அது அன்பு. அதாவது சத்தியத்தை உள்வாங்கி அன்பை வெளிப்படுத்துங்கள். இளம்வயதிலிருந்தே சத்தியத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள். சத்தியத்தை நல்வழியில் பயன்படுத்தவேண்டும். இந்தச் சத்தியத்தைச் சுயநலநோக்குடன் பயன்படுத்தினால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. அந்நாளில் மன்னர் சத்திய அரிச்சந்திரன், பல இன்னல்களின் மத்தியில் சத்தியத்திலிருந்து மாறாமல் இருந்ததால்தான் இறுதியில் வெற்றியடைந்தார். யாராலும் அவரை மாற்ற முடியவில்லை. அதே அரிச்சந்திரன் தற்போது வந்தால் அவரையே மாற்றிவிடுமளவிற்கு இந்தக் கலியின் கொடுமை அதிகரித்துள்ளது. கலியின் ஆதிக்கத்துக்கு நாம் எந்தக் காலத்திலும் ஆளாகக் கூடாது. இந்தச் சத்தியத்தை நம் வாழ்க்கையில் ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்தச் சாதனைகளை மேற்கொள்ளாவிட்டலும் பரவாயில்லை, சத்தியத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இந்த நான்கிலும் ஹிம்சை என்கிற வன்முறை சிறிதுகூட இல்லை. ஆகவே சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இந்த நான்கையும் முழுமையாக அனுசரித்தால், அஹிம்சை என்கின்ற கோட்பாடு முழுமையாக வெளிப்படுகிறது. இவ்வுயரிய கோட்பாடுகள் இல்லாமல் போனதால்தான் எங்கும் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. வீட்டினுள்ளே வன்முறை, வெளியிலே வன்முறை, கடைத்தெருவில் வன்முறை, பஸ்ஸில். ரயிலில், விமானத்தில் எங்கும் வன்முறை. எங்கும் பயம். வாழ்க்கையே பயமாகிவிட்டது. வன்முறை பத்மவியூகம் போன்று எங்கும் அனைவரையும் திணறடிக்கிறது. இறைவனின் சந்நிதானமே பயம் அறவே அற்ற இடம். இறைவனின் முன் பயம் முழுமையாக அகன்றுவிடுகிறது.இறைவன் நம்முள் இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை.

Sunday, December 27, 2020

1996 ஜூன் 21 அன்று எம்பெருமான் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நிகழ்த்திய அருளுரையின் இந்தப் பகுதியைப் படித்து மகிழுங்கள்

“அன்பின் திருவுருவங்களே, நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் பல உள்ளன. பல விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்ளும் வரை சொன்னதைச் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆகவேண்டும். தினமும் காலையில் சாப்பிடுகிறோம். எனவே மாலையில் எதற்குச் சாப்பிடவேண்டுமென எவரும் நினைப்பதில்லை. ஏனென்றால் உண்ட உணவு ஜீரணமாகிவிட்டு மீண்டும் பசியெடுக்கும். எனவே மீண்டும் உண்ணவேண்டி ஏற்படுகிறது. ஒருமுறை கழுவிய முகத்தைச் சொற்ப நேரத்தின்பின் மீண்டும் கழுவுகிறோம். அதுபோலத்தான் கேட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுது அவ்விடயம் மனதில் நன்கு பதியும். சொல்லும் விடையங்களை மனதில் பதித்து, நடைமுறைப்படுத்தும் பொழுது ஆனந்தம் கிடைக்கும், மீண்டும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும். ஆகவே ஒன்றைப் புரிந்துகொள்ளும் வரை சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லவேண்டி இருக்கிறது. சிறு குழந்தைகள் ஆரம்பத்தில் ஏ பி சீ டீ யைக் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு மில்க் என்பதை எடுத்துக்கொள்வோம். மில்க் (MILK) என்பதை அந்தக் குழந்தை மீண்டும் மீண்டும் உச்சரித்தால்தான் அது அக்குழந்தையின் மனதில் பதிகிறது. அப்படி உச்சரித்த பின்னர் தான் அதன் பொருள் விளங்குகிறது. ஆகவே அர்த்தம் புரியும் வரை, உண்மை புலப்படும்வரை உங்களுக்குச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியாகவேண்டும். பல விடயங்களைத் திரும்பத்திரும்பச் சொன்னபோதிலும் புதியன போன்றே தோன்றும். காயத்திரி மந்திரத்தைப் பற்றிப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒருமுறை சொல்வதற்கும் இன்னொருமுறை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதுவே சுவாமியின் சிறப்பம்சம். வார்த்தைகள் கூட எப்பொழுதும் புதிதானவை. ஒவ்வொரு நொடிப்பொழுதும் புதிதானவை. இறைவன் நித்திய நூதனன், என்றும் புதிதானவன். அதுதான் தெய்வீகம். இந்தத் தெய்வீகத்தில் நீங்கள் திளைக்கவேண்டுமென்றால், என்றும் நீங்கள் புதுப் பொலிவுடன் திகழவேண்டும். பழயதையும், கழிந்ததையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம். எப்பொழுதும் அனைவரும் ஆனந்தமாகவே இருக்கவேண்டும். தெய்வீகம் என்ற வார்த்தையின் அர்த்தமாக நாம் வாழவேண்டும். இறைவனுடன் ஒன்றியிருப்பதுதான் ஆனந்தம். HAPPINESS IS UNION WITH GOD. இறைவனுடன் ஒன்றிணையும்பொழுது மகிழ்ச்சி உண்டாகிறது. தெய்வீகச் சிந்தனை இல்லாதவனின் முகத்தைப் பாருங்கள். அவனது சிரிப்பு வெறும் நடிப்பாகவும், விளக்கெண்ணெய் குடித்தவினின் முகம் போலவும் தோன்றுகிறது. தெய்வீக அனுக்கிரகத்தைப் பெற்றவனின் முகத்தைப்பார்த்தால், கலகலப்பாகவும், ஆனந்தமாகவும் காணப்படுகிறது. அவன் முகத்தில் தெவீகக் களை தெரிகிறது. தெய்விக அம்சம், தெய்வீக அம்சத்தின் கதிர் அவன்மீது விழுந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகவேண்டுமெனில் அந்தத் தெய்வத்திடம் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் அவசியம் தேவை. நம்பிக்கை, அன்பு ஆகிய இரண்டும் இருந்தால்தான் நாம் தெய்வீகத்தை அடையலாம். இந்த நம்பிக்கையும் அன்பும் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்கமுடியும். எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். காட்டிலோ, கிராமத்திலோ, நகரத்திலோ அல்லது கண்காணாத தேசத்திலோ, எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். உடலின் உள்ளே, வெளியே,கண்களிலே, வீட்டிலே, மேலும், கீழும், உங்களைச் சுற்றிலும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருந்தால், எங்கு வேண்டுமனாலும் இருக்கமுடியும், செல்லமுடியும். இப்படிபட்ட நல்ல உணர்வுகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பின் வடிவங்களே, தீய பழக்கங்கள் மற்றும் தீய செயல்களை விட்டு, நல்லெண்ணங்களை வளர்த்துக்கொண்டு, நற்செயல்களுக்கு இட்டுச்செல்லும் நல்லுணர்வுகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்போம், ஆன்மீகத்தில் முன்னேறுவோம்.”

Saturday, December 26, 2020

உலகில் சத்தியம் தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகிய நற்குணங்களை வளர்க்கவந்த கலியுக அவதார புருஷரின் அருளுரைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் பெரும்பேறளித்த எம்பெருமானின் கமல மலர்ப் பாதங்களைப் பணிந்து அவரருளுடன் இத்தூய்மையான பணியை ஆரம்பிக்கிறேன்

அன்பின் திருவுருவங்களே, கிறிஸ்மஸ் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடியதையடுத்து வரப்போகும் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடுவதற்குச் சாதி, மத, மொழி, நிற பேதமின்றி உலக மக்கள் அனைவரும் தயாராகிவருகின்றனர். உலக மக்கள் மத்தியில் பிறக்கப்போகும் 2021 ஆம் ஆண்டைக் குறிப்பிடும்போது கி.பி.2021 என்றே சொல்லப்படுகிறது. யேசு கிறிஸ்து பிறப்பதன் முன்னரான ஆண்டுகளை கி.மு. என்றும் அவரது பிறப்பின் பின்னரான ஆண்டுகளை கி.பி. என்றும் குறிப்பிடப்படுவது கிறிஸ்து பிரானின் மகிமையை உலகம் எவ்வளவு முக்கியமானதாகக் கருதுகிறது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது. யேசுபிரானின் அவதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைவருடனும் அவதாரங்கள் பற்றிய உண்மைகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உலகில் வன்செயல்கள் பெருகி, நற்செயல்கள் அருகும்பொழுது, தர்மத்தையும் சாந்தியையும் சமாதானத்தையும் உலகில் நிலைநிறுத்துவதற்கெனவே அவதாரங்கள் நிகழ்கின்றன. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், பலராமர், கல்கி ஆகிய பத்து அவதாரங்களை பற்றியே பெரும்பாலும் பேசப்பட்டாலும் அவதாரங்கள் பலவென்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். அதே வேளை கௌதம புத்தர், யேசுபிரான், குருநானக், மகாவிரர் மற்றும் பல்வேறு அவதாரங்களையும், அவர்களது கொள்கைகளையும் பின்பற்றிப் பல பல மதங்கள் உலகங்கும் உருவாகியிருப்பதும் அனைவரும் நன்கறிந்த விடயம். ஆனால் உலகம் உருவாகியது முதல் நிகழ்ந்துள்ள எந்த ஒரு அவதாரத்தையும் நேரில் பார்த்தவர்கள் யாரும் தற்போது உலகில் இல்லை. திரேதா யுகத்தில் ராமபிரானும், துவாபர யுகத்தில் கண்ணபிரானும் அவதரித்ததும், கலியுகத்தில் புத்தபிரான், யேசு பிரான் மற்றும் பலர் அவதரித்து உலக மக்களை நல்வழிப்படுத்தியதும் அனைவரும் அறிந்ததாகும். சென்ற நூற்றாண்டில் பூவுலகில் அவதரித்து நம் கண்ணெதிரே வாழ்ந்து, உலகிலுள்ள மதங்கள் அனைத்தினதும் ஐக்கியத்தையும், உலகில் சத்தியம் தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகிய நற்குணங்களயும் வளர்த்த அவதார புருஷரின் அருளுரைகளை வெளியிடுவதற்குரிய பெரும்பேறளித்த எம்பெருமானின் கமல மலர்ப் பாதங்களைப் போற்றிப் பணிந்து அவரது அருளுரைகளில் சிலவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இப்பணிக்கென என்னைத் தெரிவு செய்த எம்பெருமானுக்கு எனது நன்றியையும் செலுத்துகிறேன்.உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன். ஓம் ஸ்ரீ சர்வமத சம்மதாய நமஹ. ஓம் ஸ்ரீ சர்வஹிருதய வாசினே நமஹ. ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

Friday, December 25, 2020

நமது உடலையே ஆலயமாகவும், நமது நல்லெண்ணங்கள், நல்வார்த்தைகள், நற்செயல்கள் என்பனவற்றை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவோம்

அன்பின் வடிவங்களே, நள்ளிரவு தேவாலயங்களுக்குச் சென்று உங்கள் ஆராதனைகளை முடித்தபின் இன்று மகிழ்சிகரமாக நத்தார் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எனது உளங்கனிந்த நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றையதினம் உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியான கொண்டட்டாத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா எனச் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். வசதிபடைத்தவர்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து, விருந்தும், வாணவேடிக்கைகளும், வந்து போகும் உறவினர்களுடன் மகிழ்வுடன் களிப்பதும் நடைபபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், எத்தனையோ ஏழைகளின் இல்லங்களில் எளிமையாகவே அனைத்தும் நடைபெறுகின்றன. எத்தனையோ வறுமையில் வாடும் குடும்பங்களிலுள்ள குழந்தைகள் தாங்களும் புத்தாடை அணிந்து, அறுசுவை உணவுகளை உண்டு மகிழகவேண்டுமென ஆசைப்படுவதை வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தோர் எண்ணிப் பார்க்கிறார்களா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இன்று பலதரப்பட்ட மக்கள் வீட்டில் விருந்தினர்களுடன் மகிழ்ந்திருப்பது மகிழ்ச்சியானது தான். அதே வேளை பலர் பாலன் பிறந்ததினத்தை வகை வகையான மதுவருந்தியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு துயரமான விடயம். எப்போதாவது எம்பெருமான் மதுவருந்துவதை ஆதரித்துள்ளாரா எனச் சிந்தித்துப் பாருங்கள். யேசு பிரான் ஏழைகள் துன்பப் படும்போது வசதிபடைத்தவர்கள், மற்றவர்களின் துன்பத்தைப் போக்க நினைக்காமல் தாம் மட்டும் மகிழ்ச்சியாக இருக்குமாறு கூறியிருக்கிறாரா என்பதையும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். குழந்தைகள் பலர் டிசம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவில் நத்தார் பப்பா வந்து தமக்குப் பரிசுப்பொருட்களைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதும் நமக்குத் தெரியும். எனவே யேசுபிரானின் அறிவுரைப்படி ஏங்கிகொண்டிருக்கும் குழந்தைகளின் ஆசையைத் தீர்க்க முன்வாருங்கள். ஒருமுறை யேசுபிரான் தேவாலயம் ஒன்றினுட் சென்று அங்கு தெய்வீகநோக்கமற்ற பல செயல்களளைப் புரிந்துகொண்டிருந்தவர்களளைத் திட்டடி, நமது தந்தையின் வதிவிடத்தை வியாபாரத் தலமாக்காதீர்கள் என்றதும், தெய்வ நம்பிக்கைக்குரியன தவிர்ந்த ஏனைய பொருட்களை அடித்து நொறுக்கி வீசியெறிந்ததும் யேசுபிரானின் வரலாற்றைப் படித்தவ்ர்களுக்குத் தெரியும். தேவாலாயங்களில் மட்டும் இறைவன் வசிப்பதில்லையென்பதையும் நமது உள்ளம் தான் இறைவனின் வசிப்பிடம் என்பதையும் அனைவரும் உணர்ந்து கொள்வோம். தேவன் வசிக்கும் ஆலயமான எமது உடலைப் புனிதமாக வைத்துக் கொள்வோம். தேவனுக்குப் பிடிக்காத் செயல்களைச் செய்யாமல், நல்லெண்ணங்களையும், நற்சொற்களை, நற்செயல்களையும் செய்து நமது உடலையே ஆலயமாகவும், நமது நல்லெண்ணங்கள், நல்வார்த்தைகள், நற்செயல்கள் என்பனவற்றை தேவனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவோம். அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக ஜோதி, அன்புதன் உலகமகா சக்தி என்ற தேவனின் வார்த்தைகளை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்துத் தேவனை மகிழ்விப்போம். நமக்காகத் திறந்திருக்கும் தேவனின் சாம்ராஜ்யத்தினுள் நுழைந்து எல்லாம் வல்ல பகவானுடன் இரண்டறக் கலப்போம். உலகம் முழுவதும் நலமாக வாழ வாழ்த்துவோம். நன்றி.

Thursday, December 24, 2020

நத்தார் தின நல்வாழ்த்தும் நற்செய்தியும்

அன்பின் திருவுருவங்களே, உலக மக்கள் அனைவருக்கும் நத்தார்(கிறிஸ்மஸ்) நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நத்தார் தினத்தைக் கொண்டாடுவது மட்டுமன்றி இறைவனின் போதனைகளைத் தவறாமல் பின்பற்றுவோமென உறுதி செய்து கொள்வோம். இறைவன் கூறும் நல்வழிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் சாந்தி, சமாதானம், அமைதி, மகிழ்ச்சி, நல்வாழ்க்கை அனைத்தும் தானாகவே கிடைத்துவிடும். இன்று மனிதர்கள் நிம்மதியான வாழ்க்கைக்காக ஏங்குகிறார்கள். அமைதியும் நிம்மதியும் எங்கோ வெளியுலகில் தொலைவில் இருப்பதாக நினைத்து அவற்றைத் தேடுகிறார்கள். ஏங்குகிறார்கள். பொருட் செல்வதைத் தேடி ஓடுகிறார்கள். இறைவன் நமக்குள் நிறைத்துள்ள அருட் செல்வத்தை மறந்து விடுகிறார்கள். நம் உள்ளம் அமைதி நிறைைந்தது. இறைவனால் படைக்கப்பட்ட இந்த உடலினுள் இருக்கும் உயிர் இறைவனின் ஒரு சிறு துளி என்றும் மனிதர்கள் அனைவரும் தெய்வ அவதாரங்கள் என்பதையும் பலர் அறிந்திருந்தும், கடவுள் தமது சாயலாகவே நம்மைப் படைத்துள்ளாரென்பதும் தெரிந்திருந்தும், அதனை உணர்ந்து கொள்ளாமல் இறைவனை உடலுக்கு வெளியே தேடித் திரிகிறார்கள். நாம் தினமும் சுமார் 21,600 தடவை சுவாசிக்கிறோம். ஒவ்வொரு சுவாசமும் நான் இறைவன், நான் இறைவன் என்று உணர்த்துவதைப் பலர் உணர்வதில்லை. நமது செயல்கள் அனைத்தும் இறைவனுக்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் என்பதையும் நினைவில் வைத்திருப்பதில்லை. பிரபஞ்சத்திலுள்ள பெயர்கள், உருவங்கள் அனைத்தும் இறைவனுடையதே என்பதையும், இறைவன் அன்பே உருவானவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர் என்பதையும் நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்போம். நாம் காண்பது அனைத்தும், நாம் அனுபவிப்பது அனைத்தும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பு, எதிரொலி, எதிர்வினை என்பதைப் புரிந்துகொண்டால் நாம் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்ல நடத்தையிலேயே ஈடுபடுவோம் என்பது நிச்சயம். அதன்பின் நமக்கு நடக்கும் அனைத்தும் நன்மையாகவே இருக்கும். அனைவரும் வளமுடன் வாழ எம்பெருமானைத் துதித்து விடைபெறுகிறேன். எனது பதிவுகளில் சொல்லப்பட்ட, சொல்லப்படும், சொல்லவுள்ள வார்த்தைகள் அனைத்தும் என்னுடையவையல்ல என்பதையும் இவை இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகள் என்பதையும் உங்கள் அனைவருக்கும் அறியத் தருவதில் ஆனந்தமடைகிறேன். அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.

Wednesday, December 23, 2020

இப்பிரபஞ்சமே இறைவனின் சொரூபம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

அன்பின் வடிவங்களே, தெய்வம் பூமியில் யேசு பகவானாக அவதரித்த தினத்தை அனைவரும் கொண்டாடுகிறோம். யேசு பகவான் அன்பே உருவானவர். அன்புடன் பூவுலக வாழ்வைத் தொடங்கினார். வாழ்நாள் முழுவதையும் அன்பால் நிறைத்தார். அனைவரையும் அன்பையே கடைப்பிடிக்குமாறு போதித்தார். அவரது போதனைகளை நாம் அனைவரும் நமது வாழ்வில் கடைப்பிடிப்பதே நம் அனைவரதும் கடமையாகும். எனவே நாம் அனைவரும் அன்புடன் நாளைத் தொடங்குவோம். நாள் முழுவதும் அன்புடன் செயல்புரிவோம். அன்பினால் நாளை நிறைப்போம். அன்புடன் நாளை முடிப்போம். உலகமே அன்பு மயமானது என்பதையும், இப்பிரபஞ்சமே இறைவனின் சொரூபம் என்பதையும் உணர்ந்து வாழ்வோம். உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழப் பிரார்த்திப்போம்.

Tuesday, December 22, 2020

மோகத்தைக் குறைத்து அனைவரையும் அன்புடன் நேசியுங்கள்.

அன்பின் திருவுருவங்களே, பசியால் வாடுபவருக்கு உணவளியுங்கள். அணிய உடை இல்லாதவர்களுக்கு உடையைக் கொடுங்கள். எப்பொழுதும் கௌரவத்துடன் வாழுங்கள். தியாக குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தியாக குணமுள்ளவர்களே மனிதருள் மாணிக்கங்கள். மிகவும் புண்ணியம் செய்தவர்கள். மோட்சத்தைப் பெறுபவர்களும் அவர்களே. மோட்சம் என்பது மோகத்தை விட்டுவிடுவது தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மோகத்தைக் குறைத்து அனைவரையும் அன்புடன் நேசியுங்கள். அனைவருக்கும் உதவுங்கள். அன்பு, பண்பு, தியாகம், சத்தியம், நல்நடத்தை, அமைதி, அகிம்சை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். இறைவனால் உங்களுக்குக் கொடுக்கப்படுவது அனைத்தும் உங்கள் நலனுக்கே என நம்புங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தைப் பரிபூரணமாக நம்பி வணங்குங்கள். ஓம் ஸ்ரீ சாய் ராம். SAMASTHA LOKHA SUKINOE BAVANTHU

Monday, December 21, 2020

இறைவனின் படைப்பு

இந்த வலைப்பூ ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, உருவத்தையோ, பெயரையோ முன்வைத்து ஆரம்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதரும் தமது விருப்பத்துக்குரிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம். எந்த வடிவத்தையும் எந்தப் பெயரையும் பயன்படுத்தி வழிபடலாம். எல்லாப் பெயர்களும் வடிவங்களும் இப்பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே கடவுளையே குறிப்பிடுகின்றன. இறைவனின் படைப்புக்களில் மிகச் சிறந்தது மனிதப் பிறவி. மனிதனால் மாத்திரமே பகுத்தறிவின் மூலம் எது சரி எது பிழை என்பதை அறிந்துகொள்ள முடியும். நமது ஒவ்வொரு செயலும் இறைவனை நோக்கி நாம் முன்னேறுவதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். நாம் பிறந்தது மிண்டும் மீண்டும் பிறந்து இறப்பப்பதற்கல்ல. இப்பிறவியின் மூலம் பிறவிப்பெருங்கடலின் மறு கரையை அடைந்து இறவனுடன் இரண்டறக் கலப்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். நாம் அனைவரும் இறைவனின் வடிவங்கள் என்பதை உணர்ந்து பாபத்தை வெறுத்துப், பகவானை விரும்பினால் நமது பிறவியின் பயனை அடைய முடியும். நதிகள் பலபெயர்களை கொண்டிருந்தாலும்அனைத்திலும் இருக்கும் நீர் ஒன்றுதான் என்பதையும் நதிகள் அனைத்தும் ஒரே கடலை நோக்கிப் பயணித்து அக்கடலுடனே கலக்கின்றன என்பதையும் உணர்ந்துக கொள்வோம். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, தியாகம் என்பவற்றைக் கடைப்பிடித்து, நமது எண்ணம், சொல், செயல் அகிய மூன்றையும் திரிகரண சுத்தியுடன் கடைப்பிடித்து இறைவனை அடைவோம். இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது தூய்மையான அன்பை மாத்திரமே. நாம் இறைவனை நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனை நம்மை நோக்கி நூறு அடிகள் அழைத்து வரும். எனவே இறைவனிடம் பூரணமாகச் சரணடைந்து, இறைவனின் பரிபூரண அருளைப்பெறுவதை நமது நோக்கமாகக் கொள்வோம். முழு உலகமும் நலமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம். நன்றி.

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...