Saturday, February 19, 2022

சாயிநாதன் நமக்குக் காட்டும் வழி

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

எம்பெருமான் தனது அருளுரைகளில் மனிதர்கள் அதர்மத்தைக் கை விடுவதாலும் அதர்மவழியில் நடப்பதாலும் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார்.

அன்பு, சத்தியம், மனச்சாட்சி, தர்மம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது பற்றிப் பேசுவது  மாத்திரமன்றி, நாம் அனைவரும் அவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எம்பிரான் வலியுறுத்துகிறார்.

மகாபாரதத்தில், துரோணர் தனது சீடனான அருச்சுனன் தனது குருதட்சிணையாகப் பாஞ்சால மன்னன் துருபதனைக் கைதியாக வழங்கவேண்டுமென்று கோரினார் அச்செயலின்மூலம் பாஞ்சால அரசனை இழிவுபடுத்தி அதன்மூலம் பாஞ்சாலனைப் பழிதீர்க்கவும் முனைந்தார். இச் செய்கையின் மூலம்‌ தனது‌‌ குருநாதர் என்ற பதவியைத் துரோணர் இழிவுபடுத்திய அதர்மச் செயலையும்கூட‌ப் பகவான்‌ விளக்கமாகக் கூறியுள்ளார்.

எப்போதும் எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவது அவசியம். பழிவாங்கும்‌ எண்ணத்தை அடியோடு அகற்றிவிட வேண்டும் என்றும்‌ அன்பின்மூலம்  எதையும் சாதிித்து விடலாம் என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.


எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும் என்றும் சத்தியத்தைவிட உயர்ந்த தர்மம் எதுவும் இல்லை என்பதால் சத்தியத்தின் வடிவமே  இறைவன் என்றும் உரைக்கிறார்.


எப்பொழுதும் இறைவனின் திருப்பெயரை உச்சரிக்குமாறும் வழிபாட்டுக்கென வீண்செலவு செய்வதற்குப் பதிலாக உணவற்றவர்களுக்கு உணவு அளித்திடுமாறும், உடையற்றவர்களுக்கு உடையை வழங்குமாறும், பிச்சயிடும்போதுகூட  பிச்சைபெற வந்திருப்பவர் இறைவனே என்ற மன நிலையுடன் இறைவன் நாமத்தை  உச்சரித்தவாறு  ‌பிச்சையிட வேண்டுமென்றும் விளக்கமளிக்கிறார்.

" மனம்தான் அடிமைத்தனத்துக்கும் வீடுபேற்றுக்கும் காரணம். எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது. இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதால் துன்பம் விலகும். அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே போதுமானது. 

காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே நரகத்துக்கு இட்டுச் செல்பவை.

கோபமுடைய மனிதனை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாது. அவனிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்கள். கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடக்கூடாது. 

எப்பொழுதும் அன்புவடிவமான கடவுளின் நாமத்தை உச்சரித்தவண்ண்மே இருக்கவேண்டும். 

இவ்வாறு அமைதியை அனைவரும் கடைப்பிடித்தால் நாடும் நாட்டு மக்களும்  வளம்பெறமுடியும். நாட்டு நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்புடன் வாழவேண்டும். 

யாருக்கும் எவ்வித துன்பமும் தராமல் வாழவேண்டும். உலகமனைத்திலும் அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும். 
பஜனைகளின் முடிவில் "சமஸ்த லோகா சுகினோ பவந்து" என்பதைச் சொல்லவேண்டும்.

எனவே எப்பொழுதும் அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். ஏனெனில் அன்புதான் உலகைக் காக்கிறது. மனிதர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. 

பிறர் பரிகசிக்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள் என்று அன்பு செலுத்துவதையும்‌ சத்தியத்தைக் கடைப்பிடிபதையும் கைவிடாதீர்கள்.

அன்பு செலுத்தியும், மன்னித்தும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை. உங்களுக்கு யாராவது துன்பம் செய்தாலும் அவர்கள் மீது கோபப்படாமல் அன்பு செலுத்த வேண்டும்.

கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். சந்தோசத்தையும் அவரே அளிக்கிறார். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் காப்பது கடவுள்தான். 

எல்லாம் கடவுள் எண்ணப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்கென அர்பணம் செய்யவேண்டும். எவராவது பழி சொன்னாலும் அதையும் கடவுள் செய்கிறார் என்றே நம்பவேண்டும். 

உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமே. செய்யும் செயல்கள் எல்லாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாக்கவே செய்யவேண்டும். 

இவ்வாறு நடந்துகொண்டால் முக்தி நிச்சயம்.
சம்சாரம் என்னும் இக்கடலில் நாம் மிதக்கும் பொருள்போல் இருக்கவேண்டும். அதில் முழ்கிவிடக்கூடாது. 

அன்பெனும் அமுதம் கோபம், பொறாமை எனும் அரக்கர்களை அழித்துவிடும். எப்பொழுதும் எது நடந்தாலும் அது கடவுள் சங்கல்ப்பப்படி நடப்பதாகவே நினைத்துக்கொள்ளவேண்டும். 

பஜனை செய்யுங்கள். கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள். பஜனை மிக முக்கியமானது. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பதே பஜனையின் முக்கிய அம்சம். பலர் ஒன்றுசேர்ந்து நாம ஜெபத்தில் ஈடுபடும்போது கடவுளின் மனம் உருகிவிடும். 

அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கண்விழிப்பவர்கள் மனமகிழ்ச்சியடைவர்." 

என்று பகவான் தனது அருளுரைகளில் திருவாய் மலர்ந்தருளியுள்ளதை அறிந்துள்ள நாம் அனைவரும் எம்பெருமானின் சத்திய வாக்கைக் கடைப்பிடித்து உய்வடைவோம், உயர்வடைவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...