ஓம் ஸ்ரீ சாயி ராம்
கடவுள் எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர். எல்லா வல்லமைகளும் கொண்டவர்.
எப்பொழுதெல்லாம் கடவுள் மனிதனாக அவதரித்தாரோ அந்த அவதாரங்கள் அனைத்திலும் எந்த மனிதராலும் தன்னை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அறிந்துகொள்ளவோ முடியாதென்றும் தன்னை முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிப்பது ஒரு சிறு எறும்பு சமுத்திரத்தின் ஆழத்தை அறிய முயல்வது போன்ற செயல் என்றும் கூறியிருக்கிறார்.
மனித உருவில் தான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கும்போது மனிதர்களிடையே ஒரு மனிதனைப்போல் நடந்துகொள்வதாகவும், தேவையான சந்தர்ப்பங்களின்போது மாத்திரமே தனது தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.
நமது சாயிநாதன் இதனை நமது கண்முனேயே நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
மாணவர்களுடனோ பக்தர்களுடனோ உரையாடும்போது எதுவும் அறியாத அப்பாவிபோல உங்கள் பெயரென்ன, நீங்கள் எந்த ஊரிலிருநது வந்திருக்கிறீர்கள் என்று பல கேள்விகள் கேட்பார்.
அடுத்த கணமே உங்களையும் உங்கள் குடும்பத்தவர் அனைவரைப்பற்றிய அனைத்தும் பல ஜன்மங்களாகத் தனக்குத் தெரியும் என்று குடும்பரகசியங்கள் பற்றியெல்லாம் கூறுவார்.
பலவருடங்களின் முன் ஒருதடவை பிரசாந்தி நிலையத்தில் தங்கியிருந்த பக்தர் ஒருவர் மந்திருக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அனந்தப்பூருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து வரும் வழியில் அவர் பயணம் செய்த வண்டி விபத்தில் சிக்கியதால் காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு பகவான் விபூதிப் பிரசாதத்தை வேறொரு பக்தர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியருளினார். இதனால் மனம் நெகிழ்ந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்தர், தனக்குச் சுவாமியின் பிரசாதம் கொண்டுவந்த பக்தரிடம் "சுவாமி, தங்கள் கருணைக்கு நன்றி. நீங்கள்தான் எனது டாக்டர், உங்கள் சங்கல்பப்படி நடக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று ஒரு சிறு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார்.
சிகிச்சைமுடிந்து பிரசாந்தி நிலையம் திரும்பிய பக்தர் தானாகவே நடக்கமுடியாத நிலையில் முறிவேற்பட்ட இடத்தில் கட்டு அகற்றப்படாமலேயே தரிசனத்துக்கு வந்திருந்தார்.
சுமார் இரண்டுவாரங்களில் நவராத்திரி வைபவத்தின்போது சுவாமியின் அருகாமையில் நவராத்திரி வைபவத்தில் நடக்கும் யாகத்தில் பங்குபற்றுவதே அவரது பேரவா.
அன்றைய தரிசனத்தின்போது பகவான் அந்தப் பக்தரிடம் சென்று டாக்டர் என்ன சொன்னார் எனக் கேட்டார். அதற்கு அந்தப் பக்தர் இன்னும் இரண்டு வாரங்களின் பின்தான் காலிலுள்ள கட்டை அவிழ்க்க முடியும் என்றும் அதுவரை எழுந்து நடக்க முடியாது என்றும் டாக்டர் சொல்லியுள்ளதாகச் சொன்னார். அப்படியா என்று கூறிவிட்டு பகவான் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அடுத்தநாளும் தரிசனத்தின்போதும் பகவான் அந்தப் பக்தரிடம் சென்று டாக்டர் என்ன சொன்னார் என்று மீண்டும் கேட்டார்.
இன்னும் இரண்டு வாரங்களின் பின்தான் காலிலுள்ள கட்டை அவிழ்க்க முடியும் என்றும் அதுவரை எழுந்து நடக்க முடியாது என்றும் டாக்டர் சொல்லியுள்ளதாக அந்தப் பக்தர் மீண்டும் சொன்னார். அப்படியா என்று கூறிவிட்டு பகவான் அங்கிருந்து சென்று விட்டார்.
மூன்றாவது நாளும் தரிசனத்தின் போது அதே பக்தரிடம் சென்ற பகவான் இரண்டுநாட்களும் கேட்ட அதேகேள்வியை மீண்டும் கேட்டார். பக்தரும் தொடர்ந்து தான் வழமையாகச் சொல்லும் பதிலையே சொன்னார். பகவானும் வழமையான பதிலையே சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
ஆனால் அந்தப் பக்தருக்கும் வழமையாக அவருக்க
அருகில் அமரும் ஏனைய பக்தர்களுக்கும் பகவான் ஒரேகேள்வியை எதற்காககத் தினமும் கேட்கிறார் என்ற குழப்பமும் அந்தக் கேள்விகளின் பின்னே ஏதோ காரணம் இருக்கவேண்டுமென்ற உறுதியான எண்ணமும் ஏற்பட்டது.
தரிசனம் முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன் குழப்பமான மன நிலையுடன், கடந்த மூன்று நாட்களும் பகவான் தன்னிடம் கேட்ட கேள்வியையும், தான் சொன்ன பதிலையும் அதற்கு பகவான் சொன்ன பதிலையும் தனது மனைவியிடம் கூறி, பகவான் இவ்விதக் கேள்வியும் தன்னிடம் தனது பதிலுக்கு பகவான் பதிலளிக்கும் முறையும் தனக்குக் குழப்பபத்தையும் அதேவேளை காரணமின்றி பகவான் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டாரென்பதையும் சொல்லி, தனது மனக்குழப்பத்தையும் எதற்காக பகவான் தன்னிடம் அவ்வாறு நடந்துகொள்கிறார் ஏன்பதையும் தெரிவித்தார்.
கணவனும் மனைவியும் இது பற்றிசய சிந்தனையில் சிறிது நேரம் மூழ்கி இருந்தனர்.
திடீரென அப் பக்தரின் துணைவியார் தனது கணவரிடம் அவர் விபத்து நடைபெற்றதன் பின் மருத்துவ மனையிலிருந்து பகவானுக்கு எழுதிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தீர்கள் எனக்கேட்டார். அதற்கு அந்தப் பக்தர் "சுவாமி, நீங்கள்தான் எனது டாக்டர். நீங்கள்தான் என்னைக் குணப்படுத்த வேண்டும்." எனறு எழுதியதைக் குறிப்பிட்டதுடன், பகவான் தொடர்ந்தும் ஒரே கேள்வியைத் திரும்பத் தரும்பக் கேட்டதன் அர்த்தத்தை திடீரெனப் புரிந்து கொண்டனர்.
அடுத்த நாளும் தரிசனத்தின்போது பகவான் அந்தப் பக்தரிடம் வந்து டாக்டர் என்ன சொன்னார் எனக் கேட்டார்.
உடனடியாக அந்தப் பக்தர் பகவானின் திருக்கரங்களைப் பற்றியபடி மிகப் பக்தியுடன்
கண்களில் நீர்மல்க "சுவாமி, நீங்கள்தான் எனது டாக்டர். உங்கள் சங்கலாபபடியே செய்யுங்கள்" என்றார்.
அதற்கு எமது சாயிக்கண்ணன் அந்தப்பக்தரைப் பார்த்து, பிரபஞ்சத்தையே மயக்கும் தெய்வீகப்புன்னகையுடன் மிகச் சந்தோஷம் என்று கூறிவிட்டுச் சென்றார்.
பூரண குணமடைய இரண்டு வாரங்களுக்கு மேலாகும் என்று டாக்டர் கூறியிருந்த போதிலும் அடுத்த சில நாட்களிலேயே அந்தப்பக்தர் தானாகவே எழுந்து நடந்தது மாத்திரமன்றி, நடைபெற்ற நவராத்திரி யாகத்தில் பங்குபற்றினார். யாக பருஷோத்தமரான பகவான் யாகத்தை ஏற்றுக்கொண்ட வைபவத்திலும் எம்பிரானின் திருவூஞ்சல் வைபவத்திலும் கலந்து கொள்ளும் பெரும் பேற்றையும் பெற்றார்.
கடவுளின் சங்கல்பம் என்ன என்று யாராலும் அறிந்துகொள்ள முடியாது, கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்,. நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கெல்லாம் கடவுள் வியாபித்துள்ளார், அப்படிப்பட்ட கடவுளை ஜபம், யாகம், தியானம் போன்றவை மூலமாக மாத்திரம் அடைந்துவிட முடியாது, பலவீனங்கள் நிறைந்த மனிதர்களால் கடவுள் எப்படிப்பட்டவர் என்று சொல்லவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்பதையும், எந்தப் பெயரையோ வடிவத்தையோ நீங்கள் வணங்கினாலும் கடவுளை அடைய முடியும் என்பதையும், இந்த ரகசியத்தை மனிதர்கள் புரிந்துகொள்ளாததால் ஆன்மீகத்தில் ஈடுபடாமல் யாக யக்ஞங்களில் திருப்தியடைந்து விடுகிறார்கள் என்றும் பகவான் தனது அருளுரைகளில் எடுத்துரைத்து வருகிறார்.
கடவுள் நன்நடத்தையையும் ஆன்மீகச் சிந்தனையையும் தான் எதிர்பார்க்கிறார். இவ்வுலகில் செல்வமும் சிபார்சும் தான் முதலிடம் பெறுகின்றன. இது மிகுந்த அறியாமையாகும். இந்த அறியாமையிலிருந்து வெளியேறாத வரை கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. '
நான்' என்னும் ஆணவமும் என்னுடையது என்னும் அகம்பாவமும் உள்ள இதயங்களைக் கடவுள் விரும்பமாட்டார். உலகில் சேர்த்துவைப்பதெல்லாம் ஒருநாள் அழியத்தான் வேண்டும். மனித உடலும் ஒருநாள் அழிந்துவிடும். எனவே இவ்வுலக வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கான சத்தியம், தர்மம், சாந்தி, பிரமை, அகிம்சை, திரிகரணசுத்தி என்பவற்றைக் கடைப்பிடித்துப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்சியடைவோம்.
உடலுக்கு உணவளிப்பது போன்று நமது ஆத்மாவுக்குரிய உணவையும் அளித்து இறைவனுடன் ஒண்றிணைந்து பேரின்பத்தை அடைவோம்.
உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்.
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.