ஆகவே நன்னடத்தையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.. அதுதான் உயர்ந்த வரப்பிரசாதம். லட்சார்ச்சனை செய்தலும், கோடியர்ச்சனை செய்தாலும் அவற்றால் உங்களுக்குத் தற்காலிகத் திருப்திதான் கிடைக்குமேதவிர முழுமையான ஆத்மானந்தத்தைப் பெறமுடியாது.
மக்கள் பலதரப்பட்ட வழிகளில் பணத்தை விரயம் செய்கிறார்கள். வீட்டுக்குப் பசியுடன் வரும் ஏழைகளுக்கு ஒருபிடி உணவு கூடக் கொடுக்கமாட்டார்கள்.
ஆனால் யாகங்கள் யக்ஞங்கள் செய்வதற்குக் கோடிக்கணக்கில் செலவுசெய்கிறார்கள். பணத்தைக் கொண்டு கடவுளைவாங்க முடியாது.
கடவுள்தான் எல்லாச் செல்வங்களையும் அருள்பவர். கடவுளுக்குப் பணம் தேவைப்படுவதில்லை.. அந்தப் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவிசெய்யப் பயன்படுத்தவேண்டும்.
அதனால்தான் நமது சாயிநாதன் தன்னிடம் வருபவர்கள் அனைவரையும் வெறும் கையுடன் வரும் படியும் திரும்பிச் செல்லும்போது கைநிறைய இறையருளைக் கொண்டு செல்லும்படி கூறுகிறார்.
நாமஸ்மரணையில் மாத்திரமே ஆத்மதிருப்தி கிடைப்பதாக கூறும் சுவாமி அதனால் இறைவனின் நாமத்தை உச்சரிப்பதில் அக்கறை செலுத்தவேண்டுமென்றும் இக்கலியுகத்தில் நாமஸ்மரணை மூலம் இலகுவாக இறையருளைப் பெற முடியுமெனப் பகர்ந்துள்ளார்.
அதுதான் இறைவனை அடைவதற்கு ஒரே வழி. கடவுளை அவரது திருநாமத்தினால் மட்டுமே எளிதில் அடைய முடியும்.
மகாபாரதத்தில் ஆன்றோர்களும் சான்றோர்களும் நிறைந்த திருதராஷ்டிரனின் அரச சபையில் திரௌபதியின் துகிலைத் துச்சாதனன் பலவந்தமாகக் களைய முற்பட்டபோது, திரௌபதி அவையிலிருந்தவர்களிடமும் சூதாட்டத்தில் தோல்வியடைந்த பாண்டவர்களையும் உதவிக்கழைத்தார். கண்ணபிரானின் பல பெயர்களைக் கூறிக் கதறினாள். இறுதியில் இருதயவாசி என்று அழைத்தார்.. அக்கணமே கண்ணபிரான் துரௌபதியின் சேலையை வளரவைத்து அவரைக் காத்தருளினார்.
உண்மையில் இதயமே கடவுள். கடவுள் இதயத்தில் இருக்கிறார். கடவுள் நமக்குள்ளே இருந்தும் கூட நாம் கடவுளை வெளியிலே தேடுகிறோம்.
பணத்தின் மூலம் வெளியில் உள்ள பொருட்களைத்தான் வாங்க முடியுமே தவிரமுடியுமே தவிரக் கடவுளை வாங்க முடியாது.
கடவுளை நாம் நமக்குள்ளே தான் தேடவேண்டும். அப்பொழுது உள்ளத்தினுள் உறைந்திருக்கும் இறைவனைக் காணலாம்.
"இறைவனை வெளியுலகில் தேடாதீர்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் உங்கள் முன் தோன்றி வரத்தை அருள்வார். கடவுளின் திருநாமத்தால் அவரை வர்ணிக்கலாம், அறியலாம், அடையலாம்.
இப்படிப் பெயெரை உச்சரிப்பதற்கென்றே நகர சங்கீர்த்தனங்கள் தொடங்கப்பட்டன. நகர சங்கீர்த்தனங்களில் இறைவனுடைய தோற்றங்களைப் போற்றவேண்டிய அவசியம் இல்லை. கடவுளை அளவற்ற ரூபங்களால் போற்றினாலும் பயனில்லை.
கடவுள் ஆத்மசொரூபமானவர். ஆத்மாவுக்கு உருவம் இல்லை. கடவுளிடம் நீங்கள் யார் என்று யாராவது கேட்டால், நான் ராமர். நான் கிருஷ்ணர், நான் சாயிபாபா என்றெல்லாம் அவர் சொல்ல மாட்டார். சாயி பாபா என்பது இவ்வுடலின் பெயர் மட்டுமே. ராமா என்பதும் உடலின் பெயர். சாயி பாபா என்னும் பெயர் தாய் தந்தையரால் வைக்கப்பட்டது. பெயர் என்பது வைக்கப்பட்டதே. உடன் பிறந்தது இல்லை. உடல் பிறந்தது. ஆனால் அதற்குப் பெயர் இல்லை. பிறந்த உடல் ஒருநாள் அழிந்தே தீரும். உடலுடன் பெயரும் அழிந்து விடும். பிறக்காததும் அழியாததும் ஒன்றே ஒன்றுதான். அது தான் ஆத்மா"
என்று சாயிநாதன் தனது ஆருளுரைகளில் குறிப்பிடுவது நாமனைவரும் அறிந்த விடயமாகும்.
"சமஸ்த லோகா சுகினோ பவந்து"
உலகங்களனைத்தும் நலமாக இருக்கப் பிரார்த்திப்போம்.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment