Wednesday, February 9, 2022

கடமை தவறும் பாபச் செயல்களின் விளைவு

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

செய்யும் கர்மங்களைப்பற்றியும் கர்மத்தின் பலனைப் பற்றியும் சாயி ‌நாதன் தெளிவாக விளக்கியுள்ளார்.

நாம் அனைவரும் பிறந்தது முதல் இறக்கும் வரை வினைகளைப் புரிந்துகொண்டே  ‌இருக்கிறோம். உணர்ந்தோ  உணராமலோ கர்மம் செய்துகொண்டே இருக்கிறோம்.
நாம் சுவாசிப்பது கூட நாம் செய்யும் கர்மமாகும்.

ஒவ்வொருவரும் தமக்குரிய கடமைகளைத் தவறற்ற முறையில் செய்ய‌ வேண்டுமென்றும்‌ தமக்குரிய ‌கடமையைச் செய்யாமலிருப்பதும் தவறு நடக்கும் போது தவறைத் தடுக்கும்‌ கடமையுள்ளவர்கள்‌‌ அத்தவறைத் தடுக்காமல் பார்வையாளராக‌ இருப்பதும் அத்தவறின் பாப பலன்களைத் தவறு செய்தவர்கள் மாத்திரமன்றி தடுக்கத் தவறிப் பார்வயாளர்களாக இருப்போரும் அனுபவிக்க வேண்டுமென்றும் கூறும் பகவான்,  உலகில் எங்கோ ஒரு இடத்தில் ‌நடக்கும் தவறைத் தடுக்குமாறு பிரார்த்திப்பது கூட நற்கருமம் என்கிறார்.

அதனால்தான்‌ நாம் அனைவரும்          " சமஸ்த லோகா சுகினோ பவந்து" என்று முடிந்தளவு‌ பிரார்த்திக்க வேண்டுமென்று  (அதாவது உலகமனைத்தும் நலமாக வாழவேண்டும்) கூறும் பகவான், தானும் இதனைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.


ஒரு அநியாயம் நடக்கும்போது அவ்விடத்திலிருந்தாலும் அத்தவறைத் தடுக்கும் சக்தியுள்ளவர்கள் தவறைத் தடுப்பது அவர்களின் கடமையென்றும், தவறைத் தடுக்கும் சக்தியற்றவர்கள் இறைவனைப் பிரார்த்திபாபதும் அவர்களின் கடமையென்றும் கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் அஸ்தினாபுர அரச சபையில் திரௌபதி துகிலுரியப்பட்ட சம்பவத்தின் ‌விளைவுகளைப்பற்றி எம்பெருமான் தனது அருளுரையில் குறிப்பிட்டுள்ளார்.

திரௌபதியின் துகிலையுரிந்தவன் துச்சாதனன். துகிலுரியக் கட்டளையிட்டவன் துரியோதனன். மகனின் தவறை, மகன்மீதிருந்த கண்மூடித்தனமான பாசத்தின் காரணமாகக் கண்டித்துத் தடுக்கத் தவறியவன் திருதராஷ்டிரன். இவற்றைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடமிருந்தும்  தடுக்காமல் மௌனமாக இருந்தவர் பிதாமகர் பீஷ்மர். 

இதனால்தான்  அவர்கள் அனைவரும் செய்த பாபத்திற்குரிய தண்டனைகளை‌ப் பாரதப் போரின்போது  அனுபவித்தனர்.
அதிலும் சபையில் சகல அதிகாரங்களும் பெற்றிருந்த பீஷ்மர் திரௌபதியைக் காக்க வேண்டிய தனது கடமையைச் செய்யத் தவறியதால்‌  அப் பாபத்தின் பலனாகப் போரில் வீழ்த்தப்பட்டு‌ 58 நாட்கள் அம்புப் படுக்கையில் கிடந்து வேதனையை  அனுபவிக்கும் நிலமை ஏற்பட்டதென்றும், சபையில் கடமையாற்றிய காவல் வீரர்கள் சபைக் காவலர்களாகத் தமது கடமையையே செய்தார்களென்றும், திரௌபதியைக் காக்கும் அதிகாரம்‌ அவர்களுக்கு இல்லாததால் அந்தப் பாபத்தின் பலன்‌அவர்களைச் சேரவில்லையென்றும் கூறியுள்ளார்.

எனவே நாம் நமக்குரிய கடமைகளை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்துகொண்டேயிருப்போம். 

"சமஸ்த லோகா சுகினோ பந்து " என்னும் உலகைக் காக்கும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்போம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...