நம் கண்ட தெய்வமும் கலியுகக் கண்ணனுமான சாயிநாதன் தனது வாகினித் தொடர்களிலும், ஆற்றும் அருளுரைகள் அனைத்திலும் மனிதனின் பிறப்பின் இரகசியத்தையும், இப்பிறவிப் பெருங்கடலைக் கடந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து மீண்டும் பிறவா நிலையடையும் வழிகளையும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு வருகிறார்.
தனது கடந்த 9 அவதாரங்களிலும் தீயவர்களை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டியதை உறுதிப்படுத்திய
எம்பிரான், கலியுக மக்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், அனைவருக்குமே நன்மையும் தீமையும், அசுர குணமும் தெய்வீகக் குணமும், நன்மையும் தீமையும் கலந்தே காணப்படுவதால் இவ் அவதாரத்தில் ஆயுதம் ஏந்தாமலும், எவரையும் அழிக்கும் நோக்கமின்றியும், உலக மக்கள் அனைவரையும் நல்வழிப் படுத்துவதன் மூலமுமே தர்மத்தை நிலைநாட்டி வருவதாகவும் கூறி உள்ளார்.
மனிதர்கள் ஆற்றும் செயல்கள் அனைத்துமே சுயநலத்தையும் பலனை எதிர்பார்த்தும் "நான்" என்னும் ஆணவத்துடனும் செய்யப்படுவதால், மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நிலைக்குத் தள்ளப் படுவதாகவும் கூறுகிறார்.
செய்யும் செயல்கள் அனைத்தையும் சுயநலம் இன்றியும், பிறருக்கு உதவக் கூடியதாகவும் பலனை எதிர்பார்க்காமலும் இறைவனுக்கு அர்ப்பணமாகவும் செய்யும் போது கர்மத்தின் பலன்கள் அனைத்தும் செய்பவரைச் சேராமல் இறைவனையே சென்றடைவதால் கர்மங்களின் பலன்கள் அனைத்திலிருந்தும் மனிதன் பாதிப்படைவதில்லை என்றும் பகவான் விளக்கமளித்துள்ளார்.
மேலும் நான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்யும் நற் செயல்களுக்குரிய பலன்களைத் தங்கச் சங்கிலிக்கும், தீய செயல்களின் பலன்களை இரும்புச் சங்கிலிககும் ஒப்பிடும் பகவான் இருவிதச் சங்கிலிகளும் பிணைக்கும் சக்திகொண்டதெனவும், மனிதனை மீண்டும் மீண்டும் பிறவியெடுக்க வழிவகுக்குமென்றும், நற்செயல்களின் பலன்கள் மறுபிறவியில் நல்வாழ்வுக்கு வழிவகுக்குமென்றும், தீய செயல்கள் இன்னல்கள் நிறைந்த மறுவாழ்வைக் கொடுக்குமென்றும் கூறுகிறார்.
எனவே செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யப்பட்டால் வினைகளின் பலன்களனைத்தும் இறைவனையே சேர்வதால் பிறப்பற்ற நிலை கிடைக்குமென்றும் எடுத்துரைத்து உளளார்.
மேலும், பூரணமாகச் சரணடையும் அனைவரின் வினைகளையும் அவரே ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தூய்மையாக்கிக் கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பதாகவும் கூறுகிறார்.
எனவே நமது செயல்கள் அனைத்தையும் சுயநலமற்றதாகவும் , பிறருக்கான சேவையாகவும் இறைவனுக்கே அர்ப்பணமாகவும் புரிந்து, இவ்வாழ்க்கையில் இன்னல்களின்றி, மீண்டும் பிறவா நிலையைப் பெறுவோமாக.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment