Tuesday, April 12, 2022

மானிட வடிவில் வந்த நமது சாயிநாதனின்‌ லீலை

ஓம் ஸ்ரீ சயி ராம்

ஒரு நாள் இரவு நமது ‌பகவான் பாபா பிரசாந்தி நிலையத்திலுள்ள‌ ‌தனது படுக்கையறையில் படுத்திருந்தார். அந்த அறையில் பகவானுடன மிக அணுக்கமானவர்களும் பகவானின் சேவைநிறுவனங்களில் உயர்பதவி வகிப்பதுடன் பல்லாண்டுகளாகப் பகவானின அவதார மகிமைகளை அனுபவித்து உணர்ந்தவர்களுமான இரண்டு பக்தர்கள் உடனிருந்தனர்.

அதற்கு முந்தைய தினம்தான் பகவான் வைற்பீல்டிலிருந்து பிரசாநதி ‌நிலையத்துக்குத் திரும்ப‌வந்திருந்தார்.

பகவான் திடீரென அருகிலிருந்த பக்தரிடம் "பெங்களூர் மிகக் குளிராக இருக்கிறது. என்னால் குளிரைத்தாங்க முடியவில்லை. உடனடியாகப் புட்டபர்த்திக்குப் போவதற்குரிய‌ ஏற்பாட்டைச் செய்யுங்கள்" என்று ‌நடுங்கியபடியே கூறியுள்ளார்.

அதற்கு அந்தப்பக்தர் "சுவாமி, நீங்கள் நேற்றே வைற்பீல்டிலிருந்து‌ புட்டபர்த்திக்கு‌வந்துவிட்டீர்கள். தற்போது தாங்கள் இருப்பது பிரசாந்தி நிலையத்திலிருக்கும்‌ உங்கள் தனியறையில்தான்" ‌என்று பதிலிறுத்தார்.

உடனே பகவான் குளிரில் நடுங்கும் பாவனையுடன் உடனிருந்த அடுத்த பக்தரிடம், முன்பு மற்றப் பக்தரிடம் கூறியபடியே, தனக்குக் குளிர் தாங்கமுடியாமலிருப்பதாக முறையிட்டு, உடனடியாக வைற்பீல்டிலிருந்து புட்டபர்த்திக்குச் செல்வதற்குத் தனது வண்டி ஒட்டுனரிடம் கூறி உரிய ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

இரண்டாவது பக்தரும் சுவாமி புட்டபர்த்தியிலிருப்பதையும் முந்தையதினமே வைற்பீல்டிலிருந்து வந்துவிட்டதையும் சவாமியிடம் எடுத்துரைத்ததுடன் சுவாமி தனது பிரத்தியேக அறையிலேயே இருப்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

இவற்றை ஏற்றுக்கொள்ளாத பகவான், தனது அறைக்கு வெளியேயிருந்த மாணவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அம்மாணவனை அழைத்துத் தான் வைற்பீல்டிலிருப்பதாகவும் தாங்கமுடியாத குளிரால் அவதிப்படுவதாகவும், தனது ஓட்டுனரிடம் தான் புட்டபர்த்திக்குச் செல்வதற்கு வேண்டிய ‌ஏற்பாட்டை உடனடியாகச் செய்யும்படியும் கூறினார்.

உடனே அந்த மாணவர் "நீங்கள் கூறியபடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன் சுவாமி" என்று கரங்களைக்கூப்பியபடி சொல்லிவிட்டு உடனடியாக வெளியே சென்றுவிட்டான்.

அந்த மாணவன் வெளியே சென்ற மறுகணமே தனது போர்வையை அகற்றிவிட்டுக் கலகலவெனச் சிரித்த பகவான், தனது முக்கிய தொண்டர்கள் போன்று உடனிருந்த இரண்டு பக்தர்களிடமும் "முட்டாள்களே, பகவானாகிய நான்பிரசாந்தி நிலயத்திலுள்ள எனது தனியறையிலிருப்பது கூட எனக்குத் தெரியவில்லை என்று நினைத்து, எனக்கே நான் எங்கேயிருக்கிறேன் என விளக்குகிறீர்களே, நான் மனித உருவில் வந்த அவதாரம் என்பதை மறந்துவிட்டீர்களே. அந்த மாணவனைப் பார்த்தீர்களா? பகவானின் வார்த்தையே சகலமும் என்னும் சரணாகதி மனநிலையுடன் எப்படிச் செயல்படுகிறான்! என்று கூறி நகைத்தார்.

எனவே மனித உருவில் அவதரித்த சாயிநாதன் தான் ஒரு சாதாரண மனிதன்போல் நடந்தபடி நம்மைத் தனது மாயையினுள் ஆட்படுத்தி, மறு கணமே தான் யார் என்பதைப் பல தடவை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே நமது சாயிநாதனின் தெய்வீகத்தை மனதில் பதித்த படி எம்பெருமானின் அருளில் திளைத்து இன்புறுவோம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.
.

Thursday, April 7, 2022

இறைவனின் படைப்பில் அனைத்தும் நல்லவையே எனக் கூறும் எம்பிரான்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

இவ்வுலகிலுள்ள அனைத்தும் இறைவனின் படைப்புக்களே. இறைவன் தனது படைப்பில் எதனையும் நன்மையானது தீமையானது எனப் பாகுபடுத்திப் படைக்கவில்லை.

நாம்தான்‌ நல்லது கெட்டது எனப் பாகுபடுத்திப் பார்க்கிறோம் 

இதனையே நமது சாயிபகவான் தனது சிருஷ்டியில் எவ்வித குறையுமில்லை, மனிதர்களின் திருஷ்டியில்தான், அதாவது மனிதர்கள் பார்க்கும் பார்வையிலதான் தவறு உள்ளது என்று கூறுகிறார்.

மகாபாரதத்தில் நடைபெற்ற ‌ஒரு நிகழ்வை பகவான் இது தொடர்பாக நமக்கு ஞாபகப்படுத்துகிறார்.

ஒருதடவை கண்ணபிரான் துரியோதனனை அழைத்து ஹஸ்தினாபுரத்தில் உள்ள நல்லவர்களைப்பற்றிய விபரத்தை அறிந்துவரும்படி அனுப்பினார். நகர்முழுவதும் தேடியும் அவனால் ஒரு நல்லவர் இருப்பதாகக்கூட அறிய முடியவில்லை.

எனவே கண்ணபிரானிடம் திரும்பி வந்து, நாட்டில் ஒரு நல்லவர்கூட இல்லையென்றும், தான் ஒருவனே ஹஸ்தினாபூரத்திலுள்ள ஒரேயொரு நல்லவன் என்றும் கூறினான். 

இதனைக் கேட்ட கண்ணபிரான் புன்முறுவலுடன் தருமராஜரை அழைத்து ‌ஹஸ்தினாபுரத்தில் யாராவது கெட்டவர்கள் இருக்கிறார்களா என அறிந்துவரும்படி அனுப்பினார்.

நாடுமுழுவதும் சுற்றயபடி கெட்டவர்கள் யாராவது ஹஸ்தினாபுரத்தில் இருக்கிறார்களா எனத் தேடினார் தர்மராஜன். அவரால் நாட்டில் ஒரு கெட்டவரைக்கூடக் காண முடியவில்லை.

எனவே கண்ணபிரானிடம் வந்து  நாட்டில் ஒரு கெட்டவர்கூட இல்லையென்று கூறினார்.
இதனைப் பார்த்த பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் துரியோதனனின் பதிலிலும், தருமரின் பதிலிலும்‌உள்ள வேறுபாட்டின் அர்த்தத்தை கண்ணபிரானிடம் வினவினார்கள்.

அதற்குக் கிருஷ்ணபிரான், திருதராஷ்டிரனின் மனதில் தீய குணங்களே நிறைந்துள்ளதால் அவனது திருஷ்டியிலுள்ள தவறின் காரணமாக அனைவரும் அவனது கண்களுக்குத் தீயவர்களாகத் தெரிந்ததாகவும், தருமராஜனின் மனம் எப்பொழுதும் தர்மநெறியிலேயே ஈடுபட்டிருப்பதால் அவரது பார்வையில் நாட்டிலுள்ள அனைவரும் நல்லவர்களாகத் தெரிவதாகவம் வினக்கமளித்தார், 

மேலும், நல்லவர்களின் பார்வையில் அனைவரும் நல்லவையாகவே‌ தெரிவதாகவும், தீயவர்களின் பார்வையில் அனைத்தும் கெட்டதாகவே தெரிவதாக் கூறிய நமது சாயிநாதன், இறைவன் படைத்த அனைத்தும் நல்லவையே என்றும், அவரவர் அவற்றைப் பார்க்கும் மனநிலைக்கேற்பவே இறைவனால் படைக்கப்பட்டவை நல்லதாக அல்லது கெட்டதாகத் தெரிவதாகவும், தவறு இறைவனின் சிருஷ்டியிலல்ல என்பதையும் ஒருவரது திருஷ்டியே இறைவனின் படைப்பைத் தீயதாகக்‌ காட்டுவதாகவும் கூறினார்

எனவே நன்மையோ அன்றித் தீமையோ - எதுவானாலும் நமது நடத்தையைப் பொறுத்தே அமைவதாகவும். இவ்வுலகம் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் நமது நடத்தையும் ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டுமென்றும்,  இவ்வுலகத்திற்குத் தற்போதய தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல் ஒழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான் என்றும் கூறுகிறார்.

மேலும்,  சரியான வழிமுறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகுமானால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியும் சமாதானமும் இருக்காது என்றும் சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவர்களே உண்மையான மனிதர்கள் என்றும் எடுத்துரைப்பதுடன்,

"சத்தியம் என்பது நீதி, தர்மம் என்பவை, ரீதி, தியாகம், க்யாதி. இவை மூன்றும் சேர்ந்ததே மானவஜாதி. (மனித குலம், இந்த மனித குலம் சத்தியத்திலிருந்து உருவாயிற்று, இந்தப் படைப்பு அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது, சத்தியம் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை, இந்தத்தூய கலப்பற்ற உண்மையை அனைவரும் புரிந்து கொண்டு இதனை ஆதாரமாகக் கொண்டு உண்மையையே பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள், என்று அறிஞர்களும், ஞானிகளும் கூறிவருகிறார்கள். 

 'ஸத்யம் ப்ருயாத்' என்பது நேர்மை என்னும் குணநலனைக் குறிப்பிடுகிறது. மானவ ஜாதி (மனித குலம்), நீதி (நேர்மை, ஒழுக்கம்) இன்றி வாழ முடியாது. அநியாயம். பொய்மை. அதர்மம். இவற்றால் எல்லாம் சூழப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குண நலன்களை மீட்டு வந்து மீண்டும்  நிலை நாட்ட இளைஞர்களாலும். யுவதிகளாலும் மட்டுமே முடியும். மனிதன் நேர்மையைப் போற்றி அதன் வழி நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகியவை சமுதாயத்தில் நிலவும். 

நேர்மையைத் தன் வழிமுறையாகக் கொள்ள வேண்டுமானால் மனிதன் சத்தியத்தின்படி நடக்க வேண்டும். இதனால் தான் ‘சத்தியம் ப்ருயாத்’ எனக் கூறுகிறார்கள். இது தான் மனிதனின் தலையாய கடமை. இரண்டாவது ‘ப்ரியம் ப்ருயாத்’ (இனிமையாகப் பேசுங்கள்). இது தர்மம் என்னும் குண நலனைக் குறிக்கிறது. 

இதை அடிப்படையாகக் கொண்டுதான் பகவத் கீதையில் “சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள், உங்களது பேச்சு. மற்றவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிடுவதாக அமையக் கூடாது, ஆன்மீகக் குண நலனைக் கடைப்பிடிக்கவேண்டும், ஆன்மீகப் பாதையில் செல்ல இந்தக் குணநலன்களை மனிதன் கைக்கொள்ள வேண்டும்" என்று சொல்லப்பட்டுள்ளது" என்று பகவான் தனது அருளுரைகளில் வலியுறுத்தி வருகிறார்.

நாம் அனைவரும் பகவானின் அருள்வார்த்தைகளின்படி நடந்து உய்வடேவோம்.

உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ ‌சாயி ராம்.

Monday, April 4, 2022

சாயிநாதனனின் அவதார நோக்கத்தை உணர்ந்து உய்வடைவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

ஒரு நாள் இரவு மாலை உணவை முடித்தபின் பகவான் வழமைபோல் தனது தனியறையில் அன்று தரிசனத்தின்போது பக்தர்கள் கொடுத்த கடிதங்களைப் படித்துக்கொண்டிருந்தார்.

 அவரின் முன்னால் இரண்டு மூத்த‌பக்தர்கள் உடகார்ந்திருந்தனர். பகவான் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்கும்லரை பகவானுடன் இருந்து பகவானுக்கு இயன்ற சேவைகளைச் செய்து இறுதியில் பாதநமஸ்காரம் பெற்றுச் செல்வது அவர்களது வழக்கம். சில வேளைகளில் பகவான் அவர்களுடன் உரையாடும் பாக்கியமும் ஆவர்களுக்குக் கிடைப்பதுண்டு. எனவே‌ பகவானின் திருவடிவத்தை ஆனந்தத்துடன் பார்த்து அனுபவித்துகக கொண்டிருந்தனர். 

அன்று பக்தர்களின் கோரிக்கைக் கடிதங்கள் முழுவதையும் படிக்காமல் சிலவற்றை மேலோட்டமாகப் பார்த்தபடி தனது செய்கைகளின் மூலம் தமது ‌அதிருப்தியை பகவான் வெளியிட்டிருக்கிறார். தனது அறையினுள் இங்குமங்கும் நடந்தார்.

இரண்டு பக்தர்களும் பாத நமஸ்காரத்தை எதிராபார்த்து‌ப் பகவானின் பின்னேயே நகர்ந்துகொண்டிருந்தனர். திடீரெனத் தனது படுக்கையில் அமர்ந்த பகவான்

 "நான் இப் பூவலகுக்கு வந்ததன் நோக்கம் ‌எவருக்குமே புரியவில்லை. பல்கலைக்கழகங்களையும் வேறுபல ‌கல்விநிறுவனங்களையும், மருத்துவ மனைகளையும், நீர்வினியோகத் திட்டங்களையும் மற்றும் கிராம சேவை போன்ற‌விடயங்களையும் உருவாக்க நான் தெய்வலோகத்திலிருந்து  பூவுலகுக்கு வரவில்லை.

என்னால் பெறற்கரிய மனிதப்பிறவி அளிக்கப்பட்டவர்களுக்கு  அவர்கள் இந்த அரிய பிறவியைப் பயன்படுத்தி மீண்டும்‌ பிறப்பு இறப்பற்ற தெய்வீக நிலையடைந்து என்னுடன் இரண்டறக்கலந்து என்னில் ஐக்கியமாகச் செய்வதற்கே நான் இங்கு வந்துள்ளேன்.

ஆனால் என்னிடம் வருபவர்களில் அநேகமானோர் என்னிடம் கேட்பது அவர்களது உலக வாழ்க்கைக்கான தேவைகளைத்தான். எப்பொழுதுமே கோரிக்கைகள், கோரிக்கைகள், கோரிக்கைகள் மாத்திரமே.

அவர்கள் எனக்கு அளிப்பது மாவிலைத் தோரணம், நிறைகும்ப மரியாதை, பஜனை, ஆரத்தி போன்றவையும்  தமது உலக ஆசைகளை நிறைவேற்றும்படி‌ கோரும் பிரார்த்தனைகளும் கோரிக்கைக் கடிதங்களும் மாத்திரமே.

நான் எனது விமானத்தை என்னையடையும் பேரவாவுள்ள சிலரையாவது ஏற்றிச் செல்ல விமானத்தின் அருகிலேயே காத்திருக்கிறேன். ஆனால் எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற மனநிலையுடன் சிலர் கூட என்னுடன் வரத் தயாராக இருப்பதாகத்‌ தெரியவில்லை."

எனப் பெருமூச்சுடன் தனக்குத்தானே கூறியபடி  தனது படுக்கையில் அமர்ந்திருந்தார்.

அங்கிருந்து  பகவானின் பக்தர்கள் இருவரும் கலங்கிய கண்களுடன் பாதநமஸ்காரம் பெறாமலேயே அன்றிரவு சாயிநாதனின் அறையைவிட்டு வெளியேறினர்.

அவர்களில் ஒருவர் அன்றிரவு எம்பெருமானுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் எமது சாயிநாதன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் தனக்குப் புரிந்தவகையில் மனம் குமுறிக் கண்ணீர் உகுத்தபடி யூரியூப் வலைத்தளத்தில் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

எனவே நமது சாயிபகவானின் இப்பூவுலக அவதாரத்தின் நோக்கத்தைத் தெளிவாகப் பரிந்து, பகவான் நம்மிடம் எதிர்பார்க்கும் நோக்கப்படி வாழ்ந்து உயவடைவோம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Sunday, April 3, 2022

ஏழைகள் தரித்திர நாராயணர்கள். அவர்களை உபசரிப்போர் லக்ஷ்மி தேவியின் அருளைப்‌பெறுகிறார்கள்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

"ஒரு பழத்தை நமது நாக்கால் சுவைக்காமல் அது இனிமையானது எனக் கூறமுடியாது.
அதேபோல் ஒரு மனிதனின்  நடத்தையை  ஆராயாமல் அவரை நல்லவர் என்று கூறமுடியாது.
எனவே இனிய கனியின் ‌இன்சுவையைச் சுவைக்க விரும்பாத மற்றும் நன்நடத்தை இல்லாத மனிதர்களைப் புலிபோன்ற கொடிய மிருகங்களென்றே கருதவேண்டும். 
அன்பு இல்லாத, அமைதியில்லாத ஒரு மனிதனின் இதயம் கொடிய பாலைவனத்துக்கு ஒப்பானதாகும். உண்மையில் இதயத்தில் அன்பற்ற மனிதர்கள் மனிதர்களேயல்லர்.

சத்தியம், அன்பு மற்றும் நற்பண்புகள் இல்லாதவர்களை மனிதர்கள் என்றே கூற முடியாது. இதனால்தான் நமது சாயிபகவான் நம்மை அன்பின் திருவுருவங்களே என்றும் தெய்வீக வடிவங்களே என்றும் அழைக்கிறார்

கலியுகத்தில் நாமஸ்மரணையும் பஜனையும் நம்மை இலகுவாக இறைவனிடம் இட்டுச் செல்லும்‌ மார்க்கம் என்று பகவான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள்கூட சமுதாயத்துக்குப பயனளிக்கக் கூடிய தம்மால் இயன்ற தொண்டுகளைப் புரிந்து இறைவனின் திருவருளைப் பெறமுடியும் என்று எடுத்துரைக்கும் எம்பிரான் , துறவறம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடத் தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கெனத் தம்மாலான தியாகங்களைச் செய்து தம்மைப் புனிதப்படுத்தி இறைவனிடம் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும்,. HANDS THAT SERVE ARE HOLIER THAN THE LIPS THAT PRAY , 

அதாவது, ஜபம் தியானம் போன்றவற்றைவிடக் கஷ்டப்படுபவர்கள், பசியால் மற்றும் குளிரால் வாடும் ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகள் கொடுத்து அவர்களின் துயரஙளைப் போக்குவதே இறைவனுக்குச் செய்யும் சேவையாகும் எனவும சுவாமி கூறுகிறார்.

பகவான் தனது அருளுரைகளில் ஏழைகளைத் தரித்திர நாராயணர்கள் என்றே குறிப்பிடுகிறார். அவர் ஏழைகளை நாராயணர்கள் என்று குறிப்பிடும்போது, நாராயணனை விட்டு லக்ஷ்மிதேவி ஒருபொழுதும் பிரிந்திருக்கமாட்டாரென்றும் எனவே நம்மிடம் உதவிகோரி வரும் தரித்திர நாராயணர்களை வரவேற்று உதவும் பொழுது அவர்களுடன் கூட வந்திருக்கும் லக்ஷ்மிதேவியும் உங்களால் உபசரிக்கப்பட்டு, மனம் மகிழ்ந்து நம்மீது தனது அருள் மழையைப்‌பொழிவார் என்றும் எடுத்துரைக்கிறார்.

எனவே லக்ஷ்மி கடாட்சம் தேவையானால் தரித்திர நாராயணர்களை வரவேற்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரியவேண்டும்.


தனி மனிதனுக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆசைகளுக்கு வரம்பு கிடையாது. அளவும் கிடையாது. ஆனால் ஆசைகளின்ன் பின்னே ஓடுகின்ற ஒரு மனிதன் தனது வாழ்நாளில் இன்பத்தையும், சுகத்தையும் சாந்தியையும் அனுபவிப்பது இல்லை. 

அவன் சுக துக்கங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்றால், அளவுக்குமீறிய ஆசைகளைக் களையவேண்டும். கரங்கள் வீட்டிலும் சமூகத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அதே வேளை சிந்தனையும் மனமும் இறைவன்மீது இருக்கவேண்டும். 
எந்த வேலையைச் செய்தாலும் அதனை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்கிறோம் என்ற  மனநிலையுடன் செயல்பட்டால் குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே இறைவனின் அனுக்கிரகத்தை நம்மால் பெற‌ முடியும் என்று சுவாமி  நமக்கு
வழிகாட்டுகிறார். 

மனிதனுடைய வாழ்வில் நான்கு நிலைகள் இருக்கின்றன. பிரம்மச்சரியம், சம்சாரம், வானப்பிரஸ்தம் சன்னியாசம் என்பனவே அவை. 

இவைகளில் சம்சார நிலை தவிர மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்கள் பணத்தைக் கையாளக்கூடாது என்பது சனாதன தர்மத்தின் வழக்கமாகும். 

குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்களை அரவணைத்து ஆதரவளித்து அவர்களைப் பேணவேண்டும் என்று சொல்கிறார்கள். 

ஆனால் சுவாமி இதனிலும் மேலாக,  சமூகத்தில் இருப்போர் மற்றும் சமுதாயத் தொண்டு புரிவோர இறைவனுக்குத் தொண்டுபரிகிறோம் என்ற  மனநிலையுடன் நடந்துகொண்டால் மனித வாழ்க்கையின் பயனை அடையலாம் என்று விளக்குகிறார்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Saturday, April 2, 2022

பக்தர்களுக்கு அவரவர் விரும்பும் பெயருள்ள தோற்றத்தில் அருள்பாலிக்கும் இறைவன்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

இறைவன் ஒருவரே. இறைவன் எல்லாம் வல்லவர். எல்லாம் அறிந்தவர்.

இறைவன் தேசம், மொழி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். குறிப்பிட்ட பெயரோ உருவமோ அற்றவர்.எந்த உருவத்திலோ அல்லது எந்தப் பெயரைக்கொண்டோ வணங்கினாலும் அந்தப் பெயரை‌ஏற்றுக் கொண்டு யார் எந்த உருவத்தில் வணங்கினாலும் அதே உருவத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார்.

நரசிம்மாவதாரத்தைத் தனது இஷ்ட தெய்வமாக வணங்கும் ஒருவர் தனது புனித யாத்திரையின்போது ஒரு அம்மன் கோயிலுக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.  அவருக்கு அங்கு தேவியின் சிலை உள்ள இடத்தில் நரசிம்மரைத் தரிசிக்கவேண்டுமெனனும் ஆர்வம் ஏற்பட்டது. அவரது ஆவலைப் பூர்த்திசெய்வதற்காக அங்கிருந்த தேவி தனது திருவுருவத்தை நரசிம்மமூர்த்தியின் திருவுருவமாக மாற்றி அந்தப்பக்தருக்குக் காட்சியளித்துள்ளார். இதனை அந்தப் பக்தர் மாத்திரமன்றி அங்கிருந்த அனைவரும் கண்டு தேவியின் அருளாசியைப் பெற்றுள்ளனர். மேலும் தேவியும் நரசிம்மமூர்த்தியும் வெவ்வேறு தெய்வங்களல்ல என்பதை லோகமாதா அங்கிருந்ந அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்.  

எனவே அனைவரும் நமக்குப் பிடித்த உருவத்தையும் பெயரையும் பயன்படுத்தி வணங்கும்போது நமக்கு அதே பெயருள்ள உருவத்தில் காட்சியளித்து நமக்கு இறைவன் அருள்பரிகிறார்.

இப்போதுகூடப் பல கிராமங்களில் மூன்று செங்கற்களைவைத்து நடுவிலிருக்கும் கல்லை இராமபிரானாகவும் இடது பக்கத்திலுள்ள கல்லை சீதாதேவியாராகவும் வலது பக்கத்திலிருக்கும் கல்லை இலட்சுமணராகவும் கருதி வணங்கி அருள் பெறுகிறார்கள்.

அவர்கள் கல்லிலே தெய்வத்தைக் காண்கிறார்கள்.

நமது சாயிபகவான் தன்னிடம் வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவரவரது இஷ்டதெய்வத்தின் வடிவில் காட்சியளித்து அருள்புரிவது நாம் அனைவரும் அறிந்த விடையமாகும்.

பல்புகள் வேறு வேறானாலும் அவற்றினுள் பாயும் மின்சாரம் ஒன்றேயென்றும், அதைப் போலவே எந்தத் தேசத்தைச் சேர்ந்தவராயினும் சரி, உடல்கள், உணர்வுகள் இவையெல்லாம் வேறு வேறாக இருந்தாலும் ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்திலும் ஒன்றுதான் என்றும் ஆகவே ஜாதி. மதம். மொழி, தேசியம் ஆகியவற்றின் பெயரால் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைத் துறந்து. எல்லோரும் ஒரே தெய்வத்தின் வடிவங்களே என்னும் ஒற்றுமையின் செய்தியை எல்லோரிடத்தும் பரவச் செய்யவேண்டுமென்றும் சாயிநாதன் தனது அருளுரைகளில் கூறி வருகிறார்.. 

மேலும், நாடுகள் பல ஆயினும் அவை இருக்கும் பூமி ஒன்றுதான்‌என்பதும், நகைகள் பலவடிவங்களிலும் பல பெயர்களிலும் இருந்தாலும் அவை தங்கம் எனப்படும்  ஒரே உலோகத்தினால்தான்‌ உருவாக்கப்பட்டுள்ளன என்பதும், 
பசுக்கள் பல நிறங்களிலும் பல இனங்களிலும் இருக்கும்போதிலும் அவற்றிலிருந்து ‌நாம் பெறும் பால் ஒரே தன்மையை உடையது என்றும், உடல்கள் பலவாக இருக்கும்போதிலும் அவை சுவாசிக்கும் காற்று ஒன்றே என்றும், இவ்வாறு அனைத்துப் பொருட்களிலும்  உயிரினங்களிலும் உள்ள ஒற்றுமையைப் புரிந்துகொண்டு நாம் அனைவரும் சேவை புரியும் போது தான் நாம் பரமானந்தத்தை அனுபவிக்கமுடியும் என்றும் நமது பகவான் எடுத்துரைத்து வருகிறார். 

"நீங்கள் அனைவரும்‌அன்பிலேயே பிறந்தீர்கள், அன்பிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அன்பிலேயே ஐக்கியமாகிறீர்கள். பஞ்சபூதங்கள் சுயநலமற்ற தன்மைக்கு முழுமையான வடிவங்களாகத் திகழ்கின்றன. சூரியன், உலகில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒளியையும், வெப்பத்தையும் தந்து அனைவருக்கும் வாழ்வளிக்கிறது. மரங்கள் கரியமில வாயுவைத் தன்னுள்ளே ஏற்று மனித வாழ்க்கைக்குத் தேவையான பிராண வாயுவைத் தருகின்றன. தாய் போன்ற மண்ணோ, பொறுமைக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் பாடம் போதிக்கிறது. எந்த விதமான பிரதியுபகாரமும் எதிர் பாராமல் இவை மனித குலத்திற்குத் தொண்டாற்றுகின்றன. இயற்கையை விடச் சுயநலமற்ற அன்பிற்குச் சிறந்த உதாரணம் வேறெதுவும் இல்லை. இயற்கையில் பிறந்து, இயற்கையினாலேயே போற்றிப் பாதுகாக்கப்படும் மனிதர்கள் பலர், இயற்கை வெளிப்படுத்தும், இத்தகைய நற்குணங்களைத் தன்னககத்தே கொள்ளாமல், சுயநலமும், சுயலாபமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது மிகவும் அவமானகரமானது. 

இளைய தலைமுறையினர் சுயநலத்தையும், சுயலாபத்தையும்  வேரோடு களையவேண்டும். உலக மாந்தர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பவேண்டும்" 
என்று எம்பெருமான் கூறியுள்ள அருளுரையைக் கடைப்பிடித்து வாழ்ந்து நமக்கு இறைவன் அருளியுள்ள இம்மனிதப்பிறவியின் பயனை அடைவோம்.

ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து  

உலகம் அனைத்தும்‌ நலமாகவாழ வாழ்த்துவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...