Sunday, February 20, 2022

நாம் யாரென்பதை விளக்கும் எம்பிரான்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நாம் பேசும்போது இது என் உடல் என்று கூறுவது வழக்கம்.. ஆனால் நான் தான் உடல் என்று கூறுவதில்லை. 

எனது மனம், எனது உடல், எனது தலை, எனது கை, எனது வாய் என்று கூறுகிறோமே தவிர நான் தான் வாய், நான் தான் கை என்று கூறுவதில்லை. இதிலிருந்தே நாம்‌ நம்மை நமது உடலிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது தெளிவாகிறது.

நமது உடல், மனம் ஆகியவை நாமல்ல. அவை கடவுள் நமக்கு அருளிய உபகரணம். அவற்றை நாம் மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். 
எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒற்றுமை இருக்கவேண்டும்.

தெய்வீகமான விடயங்களைப் படிப்பதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. புத்தகங்களின் பக்கங்களைத் திருப்பும்போது இதயத்தின் பக்கங்களையும் திருப்பவேண்டும். படித்தவற்றை இதயத்தில் பதியவைத்து அவற்றை முழுமையாகக் கடைப்பிடித்தல் அவசியம். அப்பொழுதுதான் புத்தகங்களைப் படிப்பதன் பயன் ஏற்படும். 

வெளியில் நாம் காண்பவை அனைத்தும் கற்பனை தவிர உண்மையில்லை. அனைத்தும் மாயையே. உண்மை என்னவென்று உணர முயலவேண்டும். 

நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான சனங்களைப் பார்க்கிறோம். ஆனால் கண்களை மூடிக்கொண்டால் யாரையும் பார்க்க முடியாது. அதுபோல் நம் அகக்கண்களை மூடியிருக்கும் பொழுது நாம் இறைவனின் வடிவம் என்னும் உண்மை புலப்படுவதில்லை. நாம் இறைவனின் வடிவம் என்பதைப் புரிந்து இறைவனின் வடிவமைத்த சோ....ஹம்.....‌ என்னும் ஹம்ச காயத்திரி‌யை உச்சரித்து இறைவனால் பரிந்துரைக்கப்பட்ட நடத்தையைக் கடைப்பிடித்தால் மாத்திரமே நாம் இறைவனின் வடிவமாக வாழ்ந்து கடைத்தேற முடியும்‌ என்பதை பகவான் ‌வலியுறுத்தியுள்ளார்.

நாம் பிறக்கும் பொழுது பெயருடன் பிறப்பதில்லை.
உலக நடைமுறைப்படியே இவ்வுலகில் நமக்குப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. எனவே நாம் யாரென்பதை நமது பெயருடன் ‌சம்பந்தப் படுத்தாமல் நாம் உண்மையிலேயே யார் என்பதை உணர முயற்சி செய்யவேண்டும்
பிறக்குமுன்பும் ஆத்மா இருந்தது, பிறக்கும் போதும் நமக்கு ஆத்மா இருந்தது, பிறந்த பின்னும்
 ஆத்மா இருந்தது, நாம் இறந்த பின்னும் ஆத்மா இருக்கும் என்பதையும், ஆத்மா அழியாதது உடல் மாத்திரமே அழியக்கூடியது, நிலையற்றது என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள‌ வேண்டும்.

எனவே நமக்கு இறைவன் கொடுத்த கருவியான இவ்வுடலைப் பயன்படுத்தி பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேண்டும். மீண்டும் இவ்வுலகில் பிறந்து இன்ப துன்பங்களை அனுபவித்து மீண்டும் இறப்பதைத் தடுக்க வேண்டும்.

செய்யும் கருமங்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யவேண்டும். செயல்களைப் புரியும்போது நான் செய்கிறேன் என்ற உணர்வைக் கைவிடவேண்டும். 

வினைபுரிபவரும், புரியும் வினையும், புரியும் வினை அனைத்தையும்‌ இறைவனுடையதே என்ற அர்ப்பணிப்புடன் புரிந்தால் வினைப்பயன்களெதுவும் நம்மைப் பாதிக்காது. 
நல்வினையின் பயன் தங்கச் சங்கிலியென்றும், தீவினைகளின் பலன் இரும்புச் சங்கிலியென்றும் குறிப்பிடும் பகவான் பிணைக்கும் சங்கிலிகள் தங்கமாக இருந்தாலும் இரும்பாக இருந்தாலும் அவை நம்மை மீண்டும் பிறவியுடன் பிணைக்கும் ‌சங்கிலியே என்பதையும் இடித்துரைக்கிறார்.

உண்மையே கடவுள். தர்மமே கடவுள். அமைதியேயே கடவுள். அன்பே கடவுள். 

கடவுளில் வாழுங்கள். அந்த அன்பு நமது இதயங்களில் இருந்துவிட்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். அன்பு என்பது தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமானதல்ல. அது தெய்வீகமானது. 

தான் நம்மீது செலுத்தும் அன்பும், நாம் தன்மீது செலுத்தும் அன்புமே உண்மையான ஐக்கியம் என்று பகவான் கூறுகிறார். கடவுள் ஒருவரே. நமது பிறவியின் குறிக்கோளும் ஒன்றே. 

இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இவ்வுலகில் நம்மால் எதையும் சாதிக்க முடியும். நாம் இவ்வுலகில் மனிதராகப் பிறவியெடுத்ததன் பலனை அனுபவிக்க முடியும்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...