Friday, February 18, 2022

இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறும் வழி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்‌அனத்துக்கும் நாம்‌ தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்கும் பிறர் காரணமல்ல.
நாம் இப்பிறவியிலோ அல்லது இதன் முன் கிடைத்த பல பிறவிகளிலோ செய்த கர்மவினைகளின் பலனைத்தான் நாம் இப்பிறவியில் அனுபவிக்கிறோம்.

இரண்டு நாட்களின்முன் நாம் காலை உணவாக என்ன சாப்பிட்டோம் என்பதே நமக்கு நினைவில்லை. அப்படியிருக்க, முற்பிறவிகளில் நாம் செய்தவற்றை எவ்வாறு நினைவில் வைத்திருக்க முடியும் என்று பகவான் கூறுகிறார்.

மேலும் எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாதென்றும்‌, கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதால் துன்பங்கள் விலகும் என்றும் சொல்லும் பகவான் கலியுகத்தில் வாழும் நாம் அனைவரும் யாகம், யோக நிலை  போன்றவற்றைக் கடைப்பிடிப்பதை விட நாமஸ்மரணை அதாவது இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதன் மூலமாக மிக எளிதாக இறைவனின் அருளைப் பெறலாம் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். 

அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே ஒரேவழியென்றும் கூறும் எம்பிரான் காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே ராட்சச குணங்களென்றும், நம்மனதில் கோபத்தை அனுமதித்தால் அது கோபப்டுபவரை மாத்திரமன்றி அவரைச் சூழவிருப்போரையும் அழிவுப் பாதையில் தள்ளிவிடுமென்றும் கூறியுள்ளார். 
கோபமும் ஆணவமும் பேராசையும் உள்ளவர்களை நம்பி எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாதென்றும், அப்படியானவர்களிடமிருந்து அனைவரும் விலகிவிட. வேண்டுமென்றும் கூறியுள்ளார். 

மேலும் நாமஸ்மரணை அதாவது ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவரும் அவர்கள் கடைப்பிடிக்கும் மதத்தில் கூறப்பட்ட அவர்களுக்குப் பிடித்த இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதன் அவசியும் அதனால் ஏற்படும் பலனையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடவே கூடாது. எப்பொழுதும் அன்பின் வடிவமாகவே இருக்கவேண்டும். இவ்வாறு அனைவரும் அன்பையும் அமைதியையும் கடைப்பிடித்தால் அனவரும் வளமாக வாழமுடியும்.

தனது நலத்தையும் பிறரின்  நலனையும் விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்புநிறைந்த மனதுடன் வாழவேண்டும். 
யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படுத்தாமல் வாழவேண்டும். 

உலகத்திலுள்ள அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும். 

அதற்காகவே அனவரும்
 "சமஸ்த லோகா சுகினோ பவந்து" 
என்று முடிந்தவரை உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். 
ஏனெனில் இந்த அன்புதான் உலகைக் காக்கிறது. இறைவன் அன்புவடிவானவர்.

மனிதர்கள் எவருமே அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. பிறர் பரிகசிக்கிறார்களே, ஏளனம் செய்கிறார்களே என்று ஒருபோதும் கடவுள் நம்பிக்கையையும் பிறர்மீது செலுத்தும் அன்பையும் சத்தியத்தையும் கைவிடக் கூடாது.
அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டும்.

கோபம் கேடு விளைவிக்கும். ஆகவே அன்புடன் வாழுங்கள். உங்களுக்கு யாராவது துன்பம் செய்தால்கூட அவர்கள் மீது கோபப்படக்கூடாது. எல்லாமே கடவுளின் செயல் என்பதையும் கடவுள் நமது நன்மைக்காகவே அவ்வாறு செய்கிறார் என்பதையும் ‌புரிந்துகொள்ளவேண்டும். 

கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். சந்தோசத்தையும் அவரே அளிக்கிறார். எல்லா நேரங்களிலும் காப்பாற்றுவதும் கடவுள்தான். தண்டிப்பதும் கடவுள்தான். 

எல்லாம் கடவுள் எண்ணப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்காக அர்பணம் செய்யவேண்டும். 

அதனால்தான் நம் செயல்களனைத்தையும் பிரம்மார்ப்பணம் எனறு இறைவனுக்கு அர்ப்பணிப்பதுடன் நமக்கு நடப்பதெல்லாம் நமது நன்மைக்கான கடவுளின் பிரசாதமே‌ என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு நடந்துகொள்பவர்கள்  இவ்வுலகிலும் மறு உலகிலும் மகிழ்ச்சியும், அமைதியும், முன்னேற்றமும் பெறுவது நிச்சயம். 

எனவே உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...