நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் தேவையற்ற துன்பங்களுக்கு உட்படுகிறோம், சங்கடப்படுகிறோம், அவமானப்படுகிறோம்.
நம்மை நாமே பாவிகள் என்று பழித்துக்குள்ளுதல் நமது தெய்வீகத் தன்மையல்ல. அடிப்படையில் நாம் தெய்வீகத் தன்மையுடைய வர்கள்.
ஒருமுறை பிரசாந்தி நிலையத்தில் மாணவர்களுடன் உரையாடும்போது பகவான் மாணவர்களைப் பார்த்து " நான் கடவுள் என்பதை நீங்கள் அனைவரும் நம்புகிறீர்களா?" எனக் கேட்டார்.
மாணவர்கள் அனைவரும் ஆமாம் சுவாமி என்று பலமாகக் கூறினர்.
அதற்குப் பகவான் "நான் இப்போது ஒரு மந்திரத்தைக் கூறுகிறேன். அதை நீங்களனைவரும் எப்பொழுதும் கூறவேண்டும்" என்று கூறியபின் தனது வசீகரம் சிரிப்புடன் " நான் இந்த உடலல்ல, நான் இறைவன், நான் இறைவன் என்று தொடர்ந்து கூறிக்கொண்டேயிருங்கள்" எனறு ஆணித்தரமாகக் கூறினார்.
எம்பெருமானின் இவ்வார்த்தைகளிலிருந்தே நாம் அனைவரும் இறைவனின் சொரூபங்களென்பது புரிகிறதல்லவா.
மேலும் தான் பூரண அவதாரமென்பதையும் நாம் அனைவரும் அம்சாவதாரங்கள் என்பதையும் தனது அருளுரைகள் பலவற்றில் எம்பெருமான் எடுத்துரைதாதுள்ளார்.
மேலும் நாம் அனைவரும் இறைவனிடமிருந்தே வந்தவர்கள் என்பதையும் இறைவனையே சென்றடைய வேண்டுமென்றும் பலமுறை பகர்ந்துள்ளார்.
மேலும் தன்னுடைய சங்கல்பமின்றித் தன்னை நினைக்கக்கூட முடியாது என்றும் கூறியுள்ளார்.
பகவான் கொடுத்துள்ள அறிவையும், மனவலிமையையும் பயன்படுத்தி நாம் செயல்பட வேண்டுமென்றும், உலகம், வாழ்க்கை பற்றிய உண்மைகளை நாம் உணர்ந்து, மீண்டும் மீண்டும் பிறந்து இறக்காமல் இறைவனை அடையும்முயற்சியில் ஈடுபடவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நமது முயற்சிகளை இறைவனின் வழிகாட்டலின்படி மேற்கொள்ள வேண்டுமென்றும், நம்முடைய முயற்சியில் கவனம் செலுத்தாமல் புலன்களையும், புலன்கள் செல்லும் வழியில் மனதையும், மனவோட்டத்தின்படி நாமும் அலையந்துகொண்டிருந்தால் பலன் ஏதும் கிடைக்காது, நம்மைச் சீர்படுத்திக்கொண்டால் மட்டுமே நமக்கு வீடுபேறு கிடைக்கும். என்றும் கூறுகிறார்.
பிறப்பு வாயிலாக நாம் நமது பயணத்தை எங்கு தொடங்கினோமோ அதே இடத்திற்கு மீண்டும் நாம் செல்லத்தான் வேண்டும். அது தவிர்க்க இயலாத ஒன்றாகும். அந்த இடமே இறைவனாகும்.
ஒரே ஒரு சூரியன்தான் உள்ளபோதிலும் அவர் கோடிக்கணக்கான குளங்கள், கிணறுகள், பானைகள் போன்றவற்றுள் பிரதிபலிக்கிறார். அதைப்போலத்தான் தனி மனித ஜீவிகள் அனைவரும் இறைவனுடைய பிரதிபலிப்பாக இருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்குள்ளேயும் ஆத்மா இருக்கிறது. ஒவ்வொருவரின் இதயத்துக்குள்ளும் சுவாமி பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். இதனை உணர்தலே உண்மையான ஆத்மாநந்தமாகும் என்று வலியுறுத்தும் நமது சாயிநாதன், நமக்குள் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்துவிட்டால் அதுவே நமது பிறவிப்பிணியிலிருந்து விடுபடும் வழியாகும் என்றும் வலியுறுத்துகிறார்.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment