Wednesday, March 23, 2022

நமது செயல்கள் அனைத்தும் பிறரின் நன்மைக்காக இருக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

நமது சாயிநாதன் தனது அருளுரைகளில் 

"எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், அனைவருடைய நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‌சுயநலத்தைக் கடைப்பிடிக்காதீர்கள்.

உலக மக்கள் அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்டு கடமைகள் அனைத்தையும் செய்யுங்கள். உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தனிப் பட்ட பலன்களை மட்டும் கருத்தில்கொண்டு செயல்களைப் புரியாதீர்கள். 

ஜபம், தியானம் போன்றவற்றைச் சுயநல நோக்கத்துடன் செய்யாமல் உலக நன்மைக்காகச் செய்யுங்கள். உஙகளுக்குப் பிடித்த இறைவனுடைய பெயரைச் சொல்லியவாறு, நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யுங்கள்.

நீங்கள் ஒருவருக்கு உதவும் போது "நான் உதவி செய்கிறேன்" என்ற எண்ணமில்லாமல் சமுதாயத்தின் ‌நலனுக்காகச் சேவை புரியவேண்டும். இதுவே உண்மையான சாதனையாகும். நீங்கள் யாருக்குச் சேவை செய்தாலும், இறைவனுக்குச் செய்யும் சேவையாகக் கருதியே‌ செய்யுங்கள். 

இதயத்தில் ‌அன்பு‌ம், கருணையும் நிரம்பியிருந்ததால் ஒரு உயிரற்ற சவம், ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு மனிதன் ஆகியவர்களைப் பார்த்ததுமே புத்தருக்கு உலகின் நிலையற்ற தன்மை பரிந்து அவரால் பரிநிர்வாண நிலையை அடையமுடிந்தது. 

நீங்கள் எத்தனையோ சவங்களையும், வயது முதிர்ந்தோரையும், நோயாளிகளையும் பார்க்கிறீர்கள்.. ஆனால் பலரிடம் அத்தகைய மனமாற்றம் ஏற்படாதது வருந்தத்தக்கது"
என்று கூறுகிறார். 

மேலும், துரதிஷ்டவசமாக, பலரின் இதயங்கள் கடினமான பாறைகளாக மாறிவிட்டிருப்பதாகவும்,. பிறரின் துயரங்களை நமக்கு ஏற்படும் துயரமாகக் கருதிப் பிறரின் துயர்களைத் துடைக்க வேண்டும் என்றும்  பரிநிர்வாணம் அல்லது பந்தவிடுதலை அடைய வேண்டுமென்றால், அடுத்தவரது துயரத்துடன், தன்னையும் இணைத்துப் பார்த்து, அவர்களது துயர்களைக் களைய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்‌என்றும் நமது சாயிபகவான் தனது அருளுரைகளில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

எனவே நாம் அனைவரும் தன்னலமற்ற, தியாக மனப்பான்மையுடன் கூடிய செயல்களைப் புரிவதன் மூலம் நமது சாயிநாதனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

உலகம் முழுவதும் நலமாக வாழ வாழ்த்துவோம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...