Wednesday, March 16, 2022

புலனடக்கத்தின் மகத்துவம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

அன்பின் அவதாரங்களே,

நாம் அனைவரும் அன்பையும், தியாகத்தையும் நமது பிராணனாக, மூச்சுக் காற்றாக எண்ணவேண்டும்.

புலன்களை அடக்கவேண்டும்.

.எந்த ஒரு ஆன்மீக சாதனையாயினும் அதில் வெற்றி பெற வேண்டுமானால் புலனடக்கத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலமே தெய்வீகத் தன்மைக்கு உயரமுடியும். 

இலங்கை வேந்தன் இராவணேசன் 64 கலைகளிலும் தேர்ச்சிபெற்றவன்.
மிகுந்த அறிவாளி. பலசாலி. தனது புலன்களை எளிதாக அடககியதன் காரணமாகச் சிவபெருமானின் தரிசனம் பெற்று, அவரிடமிருந்து வரங்கள் பல பெற்றவன்.

ஆனால் மனிதர்களால தன்னை வெல்லமுடியாது என்ற ஆணவமும் அகம்பாவமும் அவனிடமிருந்த காரணத்தால் ஈசனிடம் வரம் பெறும் பொழுது, மனிதர்களால் தனக்கு மரணமேற்படக்கூடாது என்ற வரத்தை அவன் கேட்கவில்லை. எனவே எம்பெருமான் மனிதனாக அவதரித்து அவனை வதம்செய்தார்.

மேலும் ஐம்புலன்களையும் ஐம்பூதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இராவணன் தனது தங்கை சூர்ப்பனகையின் வார்த்தைகளால் புலன் அடக்கத்தைக் கைவிட்டுக் கடும் கோபமடைந்து பழிவாங்கும் மூர்க்க குணத்துக்கு ஆட்பட்டுச் சீதாதேவியாரைக் கடத்தியதன் காரணமாக இராமபிரானால் வதம் செய்யப்பட்டான். அவன் மாத்திரமன்றி, அவன் தம்பி கும்பகர்ணன், அவனது புதல்வர்கள் மற்றும் அரக்கர்குலமே அழிக்கப்பட்டது.

இராவணனை இராமர் வதம் செய்தார் என்பதைவிட‌ இராவணனுக்கும் கும்பகர்ணனுக்கும் சாபவிமோசனம் அளித்தார் என்பதே உண்மை.

கும்பகர்ணனும் இராவணனும் வைகுண்டத்தில் திக்குப்பாலகர்களாக இருந்தனர். அவ்வேளை இறைதரிசனத்துக்காக வைகுண்டம் வந்திருந்த முனிசிரேஷ்டர் ஒருவரை சன்னிதிக்குச் சென்று பகவானைத் தரிசிக்க முடியாதபடி தடுத்தனர். இதனால் கோபமடைந்த அம்முனிசிரேஷ்டர் இரு திக்குப் பாலகர்களையும் பூவுலக வாசிகளாகப் பிறக்கும் படி சபித்துவிட்டார். சாபம் பெற்ற இருவரும் தமது தவறையுணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்டு சாபவிமோசனத்துக்கு மன்றாடினர்.

அதேவேளை அங்கு வந்த வைகுந்தவாசனின் கோரிக்கையை ஏற்ற முனிவர், இறைபக்தி நிறைந்த ஐந்து பிறவிகள் அல்லது மகாவிஷ்ணுவைத் தூற்றும் மூன்று அரக்க குணம் கொண்ட பிறவிகளைப் பெற்று  மகாவிஷ்ணுவால் வதம்செய்யப்பட்டு  மீண்டும் வைகுந்தத்தை அடையும் வரத்தைப் பெற்றனர்.

மிக விரைவில் வைகுந்தம் திரும்ப விரும்பிய திசைபாலகர்கள் மூன்று அசுரப் பிறவியை விருமபிப்பெற்று, மகாவிஷ்ணுவால் வதம்செய்யப்பட்டு வைகுந்தம் திரும்ப விரும்பினர். எனவே இதன் முன்  இரண்டுமுறை மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டு, மூன்றாவது முறையாக இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் பிறந்து இராமபிரானால் வதம் செய்யப்பட்டுச் சாபவிமோசனம் பெற்று மீண்டும திக்குப்பாலகர்களாக வைகுந்தத்தை அடைந்தனர்.

கோபம் என்பது நாயின் இயல்பு. சலனப்படுத்திக் கொண்டே இருப்பது குரங்கின் இயல்பு. 

எனவே கோபம் வரும் போது நான் நாயல்ல, நான் மனிதன் என்றும், அதைப் போலவே மனம் அலை பாயும் போது திரும்பத் திரும்ப நான் குரங்கல்ல, நான் மனிதன் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள்

. சத்தியம். தர்மம். சாந்தி. பிரேமை. அஹிம்சை ஆகியவை தான் உண்மையான மனித உயர் குண நலன்கள். இந்தக் குணநலன்களைப் பஞ்ச பிராணன்களுக்கு ஒப்பிடலாம். பிராண. அபான. வ்யான. உதான மற்றும் சமான என்பவையே பஞ்ச‌ பிராணன்கள். 

இந்தக் குணநலன்கள் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையையே துறந்து விடுவதைப் போன்றதாகிவிடும்.

இக் குணநலன்களை இழந்து விட்டதால்தான் மனிதர்கள் இன்று வாழும் பிணங்களாக இருக்கிறார்கள்..

குண நலன்களை நம்பிக்கையுடன் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

. அவற்றைப் போற்றி வளர்த்து, அவற்றின் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவியுங்கள். 

எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே அமைதியிருக்கிறது. எங்கே அமைதியிருக்கிறதோ, அங்கே சத்தியம் இருக்கிறது. எங்கே சத்தியம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார். 

எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது. 

அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...