Tuesday, March 29, 2022

பலமதத்தினரும் இறவன் ஒருவரையே பலபெயர்களைப் பயன்படுத்தி வணங்குகிறார்கள்.

ஓம் ஸ்ரீ சாயிராம்.

ஆன்மீகப் பயிற்சி என்றால் என்ன என்று நமது சாயிநாதன் தனது அருளுரைகளில் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

பொதுவாக உலக மக்கள் ஜபம், தியானம், தவம் ஆகியவைதான் ஆன்மீகப் பயிற்சி முறையென்று எண்ணுகிறார்கள்.  

தியானம் என்றால் என்ன என்பதன் உண்மையை அறிந்து‌கொள்ளாமல் தியானத்தில் ஈடுபடுகின்றனர்.  தாங்கள் கடவுளின் மேல் ஈடுபாட்டுடன் தியானத்தில் ஈடுபடும் பலர் கடவுள் யாரென்று தெரிந்துகொள்ளாமலேயே ஆன்மீகத்தில் முன்னேற்றமடைய முயற்சி செய்கின்றனர்.

ராமா, கிருஸ்ணா, யேசு, அல்லா, புத்தா, ஜொராஷ்டிரா என்ற அவர்களுக்குப் பிடித்த பெயர்களை உச்சரித்தவாறு அவர்கள் தியானத்தில் ஈடுபட முயற்சி செய்கிறார்கள்.  ஆனால் அவர்கள் பலரும் தாங்கள் உச்சரிக்கும் பெயர்கள் அனைத்தும் கடவுள் என்னும் ஒருவரையே‌ குறிப்பிடுகிறது ‌என்ற உண்மையை உணர்வதில்லை.

திருக்குரானில் சொல்லப்பட்டுள்ள அல்லா என்னும் சொல்லின் பொருள் எல்லாம் வல்ல இறைவன் என்பதாகும்.  இராமர் என்னும் பெயர் திரேதாயுகத்தில் மனித உருவில் அவதரித்த இறைவனுக்கு வசிஸ்ட‌மகரிஷி இட்ட பெயராகும்.

கிருஷ்ணர் என்னும் பெயர் துவாபர யுகத்தில் இறைவன் மனித உருவில் அவதரித்தபோது அவரது மனித உடலுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகும்.

ஜேஹோவா என்பது யூத மொழியில் இறைவனைக் குறிக்கும் சொல்லாகும்.

அதேபோல் ஒவ்வொரு மதத்திலும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது நாட்டில் வழக்கிலிருந்த இறைவன் என்னும் சொல்லைக் குறிக்கும் பெயரையே கூறிக்கொள்கிறார்கள்.

உதாரணமாக நாம் தாகத்துக்கு அருந்தும் தண்ணீரை எடுத்துக்கொள்வோம்.

வேவ்வேறு மொழிகளில் தண்ணீருக்கு வெவ்வேறு பெயர்களைச் சொல்கிறார்கள்.

ஆங்கில மொழியில் தண்ணீரை வாட்டர் (water) என்றுகூறுகிறார்கள். 

சிங்கள மொழியில் 'வத்துற' என்று அழைக்கிறார்கள்.

கன்னட மொழியில் 'நீரு' என்கிறார்கள்.

ஜப்பானியர்கள் 'மிசு' எனக்ககூறுகிறார்கள்.

ஆனால் அனைவரும் அவர்களது மொழிகளில் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் தாகத்தைப் போக்கும் ஒரே  பொருளான தண்ணீரையே குறிக்கிறது.

அதுபோல்தான் நம்மைப் படைத்துக் காத்து வீடுபேறளித்து அருள்புரியும் இறைவனாகிய ஒருவரையே வெவ்வேறு மதத்தினர்ஙள் தமது மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் உரிய பெயர்களால் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்.

சீரடி சாயிபகவான் ஒருமுறை தனக்குத் தாகமாக இருப்பதாகக் கூறியபோது அவரது அருகிலிருந்த இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பக்தர்கள் அவர் பருகுவதற்கு நீர் கொடுத்தனர். அப்போது பாபா இஸ்லாமியர் கொடுத்த நீரையும்,‌‌இஸ்லாமியர் கொடுத்த நீரையும், இந்து பக்தர் கொடுத்த நீரையும் தான் வைத்திருந்த ஒரேகுவளையில் ஊற்றி, இந்தக் குவளையில் இஸ்லாமிய நீர் எது,இந்து நீர் எது, கிறிஸ்தவ நீர் எது என்று கேட்டபடியே அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொடுத்தது தாகத்தைத் தணிக்கும் ஒரேநீர்தான் என்பதை விளக்கி எல்லோரும் பல்வேறு பெயர்களில் வணங்குவது இறைவன் ஒருவரைத்தான் என்று கூறி, அவர்களுக்கு மதங்கள் என்பதன் பொருளை விளக்கினார்


அன்பெனும் உணர்வோடு செய்யப்படும் அனைத்துமே தியானமென்று பகவான் கூறுகிறார். .மணிக்கணக்காக ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதைவிட  சக மனிதர்களிடம் அன்பு செலுத்துவதும் உதவுவதுமே இறைவனை மகிழ்விக்கும் செயல் எனவும் பகவான் கூறுகிறார்.

உண்மையான ஆன்மீக சாதனை என்பது அனைவருடனும் கைகோர்த்துச் சமுதாயம் முழுமைக்குமாக உழைப்பது தான். அதன் மூலமே சமுதாய முன்னேற்றம் ஏற்பட முடியும். 

அன்பபுதான் கடவுள். ஆகவே நாம் அன்பு நிறைந்தவர்களாக வாழவேண்டும். அன்பற்ற இதயம் வறண்ட தரிசு நிலத்திற்குச் சமம் என்று பகவான் இடித்துரைக்கிறார். நம் அனைவரினதும் அனைத்துச் செயல்பாடுகளும் அன்புடன் செய்யப்படவேண்டும்.  

புதிதாகப் பிறந்த குழந்தை எப்படி உடனடியாகப் பட்டப் படிப்புக்கான வகுப்புக்களுக்குச் செல்ல முடியாதோ அதே போலத்தான் எவரும் உயர்ந்த பிரேமைத் தத்துவத்தை உடனடியாக அடைய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும் 

ஒருவர் :நிவ்ருத்தி' எனப்படும் தனது உள் நோக்கிய பார்வையைச் செலுத்தத் தயாராகும் வரை. இந்த 'ப்ரவ்ருத்தி' எனப்படும் வெளிப்புறப் பார்வை வழிமுறைகளை மேற்கொள்ளத்தான் வேண்டும் என்பதையும் பகவான் விளக்கியுள்ளார்.

எந்த ஒரு செயலையும் ஆன்மீகப் பார்வையோடு அணுகவேண்டும். சத்தியம். பிரேமை என்பவற்றைப் பின்பற்றிச் செய்வதைவிடச் சிறந்த ஆன்மீகப் பயிற்சி முறை வேறெதுவும் கிடையாது என்றே நமது சாயிபகவான் கூறவருகிறார். சத்தியமும். பிரேமையும் இறைவனின் மறு பெயர்களாகும். ஆகவே இவை இரண்டுமின்றி ஆன்மீக சாதனைகளை மேற் கொள்வதில் அர்த்தமில்லை என்பதே எம்பெருமானின் அருள்வாக்கு.

சாயிநாதனின் வழிகாட்டலைக் கடைப்பிடித்து நாம் அனைவரும் இம் மனிதப்பிறவியின் பேற்றை அடைவோம்.

அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...