ஓம் ஸ்ரீ சாயி ராம்
நாம் அனைவரும் வெவ்வேறு வடிவத்தைக் கொண்டிருந்தாலும். வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் இறைவனின் வடிவங்களே.
பல்புகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றினூடாகப் பாயும் மின்சாரம் ஒன்றுதான்
அதைப் போலவே நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவையெல்லாம் வேறு வேறாக இருந்தபோதும் நம் அனைவரினதும் ஆத்ம தத்துவம் ஒன்றுதான்.
ஆகவே ஜாதி. மதம். தேசியம் ஆகியவற்றின் பெயரால் நம்மிடமுள்ள வேறுபாடுகளைத் துறந்து. ஒற்றுமையின் மகத்துவத்தை எல்லோரிடத்தும் பரவச் செய்யவேண்டும்.
நாடுகள் பலவாக இருந்தபோதிலும் அவை இருக்கும் பூமி ஒன்றுதான். நகைகள் பல்வேறு வடிவங்களில் இருந்தாலும் அவற்றிலிருப்பது தங்கம்தான். பசுக்கள் பலவாக இருந்தாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் பால் ஒரே தன்மையானதே.
உடல்கள் பலவாகஇருப்பினும் அனைத்திலும் இயங்கும் மூச்சுக் காற்று ஒன்றே!.
இவ்வாறு அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஒற்றுமையைப் புரிந்து சேவை புரியும் போது தான் பரமானந்தத்தைஅனுபவிக்க முடிகிறது. நாம் அனைவரும் அன்பிலேயே பிறந்தவர்கள், அன்பிலேயே வளர்ந்தவர்கள். அன்பிலேயே ஐக்கியமாகியுள்ளோம்.
பஞ்சபூதங்கள் சுயநலமற்ற தன்மைக்கு முழுமையான வடிவங்களாகத் திகழ்கின்றன. சூரியன், சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்துக்கும் ஒளியையும் வெப்பத்தையும் அளித்து நாம் அனைவரும் ,நலமாக வாழ வளிவகுக்கிறது.
மரங்கள் கரியமில வாயுவைத் தன்னுள்ளே ஏற்றுப் பிராணவாயுவை வெளியிட்டு உயிர்கள் வாழ உதவுகின்றன.
தாய் போன்றபூமி பொறுமைக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் நமக்குப் பாடம் போதிக்கிறது. எந்த விதமான பிரதியுபகாரமும் எதிர் பாராமல் இவை மனித குலத்திற்குத் தொண்டாற்றுகின்றன.
சுயநலமற்ற அன்பிற்கு இயற்கையை விடச்சிறந்த உதாரணம் வேறெதுவும் இல்லை.
இயற்கையில் பிறந்து, இயற்கையினாலேயே போற்றிப் பாதுகாக்கப்படும் மனிதன், இயற்கை வெளிப்படுத்தும், இத்தகைய நற்குணங்களைத் தன்னககத்தே கொள்ளாமல், சுயநலமும், சுயலாபமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது மிகவும் அவமானகரமானது.
இளைய தலைமுறையினர் சுயநலத்தையும், சுயலாபத்தையும் ஒரு சிறிய துளி கூட மிச்சமிராமல் வேரோடு களையவேண்டும். உலக மாந்தர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என விரும்பவேண்டும்.
ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து (உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்)
No comments:
Post a Comment