Wednesday, March 30, 2022

சத்தியமே மிக வலிமை வாய்ந்தது.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நமது சாயிநாதன் தனது உரையாடல்களின்போதும் அருளுரைகளின்போதும் சத்தியத்தின் மகத்துவத்தைப்பற்றி வலியுறுத்திவருகிறார்.

இவ்வுலகில் மனித உருவில் அவதரிக்கும் போது அந்த அவதார புருஷரின் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தியமே என்பதை நமக்கு உணர்த்திவரும் எம்பெருமான், சத்தியத்தைவிட  உயர்ந்த தர்மம் எதுவுமே இல்லை,  அதனால் எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும், சத்தியமே இறைவனின் திருவுருவம், திருவாய்மொழி, வடிவம் என்பதை வலியுறுத்துகிறார்.

மேலும் தனது பெயரே சத்தியம், அதனால் தனது வாழ்க்கையும் வார்த்தைகள் அனைத்துமே சத்தியம், சத்தியம் சத்தியம் என்று கூறியுள்ளார்‌. 'ஸத்யமேவ ஜெயதே' அதாவது 'சத்தியமே எப்பொழுதும் வெற்றிபெறும்' என்பதை வலியுறுத்துகிறார்.

எப்பொழுதும் இறைவனின் திருப்பெயரைச் சொல்லவேண்டியதன் அவசியத்தையும், வழிபாட்டுக்கென வீண்செலவு செய்யவது தேவையற்றது என்றும் கூறிவரும் பகவான் தன்னிடம் வரும் பக்தர்களிடம் வெறும் கையுடன் வந்து வீடு திரும்பும்போது தனது அருளால் நிரம்பியபடி செல்லும்படி சொல்லி வருகிறார்.

மேலும் உணவற்றவர்களுக்கு உணவு அளித்திடுமாறும், உடையற்றவர்களுக்கு உடையைக் கொடுக்குமாறும் கூறிவரும் பகவான், கடவுளின் பெயரை உச்சரித்தபடியே எல்லா வேலைகளையும்  செய்யுமாறும், நமது நாமஸ்ரணையை வெளியில் உரக்கச் சொல்லாமல் மனதுக்குள்ளாகச் சொன்னாலே போதும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பிச்சயிடும்போதுகூட உங்கள் மனுதுக்குப் பிடித்த இறைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டே பிச்சையிடவேண்டுமென்றும், பிச்சை கேட்டுவருபவர்களும் இறைவனின் சொரூபங்கள்தான் என்றும் கூறிவரும் சாயிநாதன் பிச்சையெடுப்பவர்களைத் தரித்திர நாராயணர்கள் என்றும் அவர்கள் நாராயணரின் வடிவங்களே என்றும்‌ கூறுகிறார்.

மனம் தான் அடிமைத்தனத்துக்கும் காரணமாக இருப்பதாகவும், வீடுபேற்றுக்கும் மனமே காரணமென்றும், எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களது மதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவனின்  திருநாமத்தைச் சொல்வதால் அவர்களது  துன்பங்கள் விலகுமென்றும், அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் திருநாமம் போதுமானது என்றும் சாயிநாதன் வலியுறுத்திவருககிறார்.

மதம், மாச்சரியம், காமம், குரோதம், லோபம், மோகம் ஆகியஅனைத்துமே இராட்சச குணம் கொண்டவை என்பதையும், இந்த‌ அரக்ககுணங்களை நாம் நம்மை அண்டவிடவேகூடாது என்றும் இந்த அரக்க குணங்கள் நம்மை அணுக அனுமதித்தால் அவை நமது மனிதப் பிறவியின் பயனையே அழித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

கோபப்படும் மனிதர்களை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாதென்றும் அவர்களிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்களென்றும்,
எப்பொழுதும் அன்பைக் கடைப்பிடித்து அன்பு சத்தியம் என்பனவற்றின் வடிவமான கடவுளின் நாமத்தை உச்சரித்தவண்ணமே இருக்கவேண்டுமென்றும் எமது சாயிநாதன் தமது அருளுரைகளில் கூறி வருகிறார்.

இவ்வாறு சத்தியத்தையும் அன்பையும்  அனைவரும் கடைப்பிடித்து வாழ்ந்தால் நாடும், நமது வீடும், நாமும் வளம்பெறமுடியுமென்றும், 
யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படாமல் அனைவரும் நலமாக வாழமுடியுமென்றும் எம்பெருமான் எடுத்துரைத்து வருகிறார். 

அனைவரும் நலமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திப்போம். 

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...