Tuesday, March 8, 2022

சாயிநாதன் சொன்ன‌ கர்ம விதியின் நியதி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

இவ்வுலகில் மனிதர்கள் செய்யும் வேலைகள் எல்லாமே கர்மவிதிக்கு உட்பட்டதாகும்.

இன்று உலகில் வாழும் மனிதர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் சுயநலம், பலனை எதிர்பார்த்தல் மற்றும் அகம்பாவம் போன்றவற்றில் ஆட்பட்டுள்ளனர். மனிதர்கள் தமக்காகவே வாழ்வதால் இப் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கி அல்லல் படுகின்றனர். மனிதர்கள் தமது கர்மவினைகளில் சிறைப்பட்டுள்ளனர்.

இறைவனுக்கு அர்ப்பணமாகப் புரியும் எந்தச் செயலும்  மனிதரை எவ்விதப்பாதிப்புக்கும் உள்ளாக்குவதில்லை. தெய்வார்ப்பணமாகச் செய்யும் எல்லாச் செயல்களும் கர்மயோகமாகவே பரிணமிக்கிறது.

ஒருவர் செய்யும் கர்மத்துக்கும் கர்மயோகத்துக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் தனது சுயலாபத்தையும், பலனையும் எதிர்பார்த்து,  நான் என்ற எண்ணத்துடன் செய்யும் காரியங்கள் சாதாரண கர்மமாகக் கருதப்படுகிறது.

சிறிதளவுகூடச் சுயநல எண்ணம் இல்லாமலும், எவ்விதப் பலனை எதிர்பார்க்காமலும், நான் என்ற அகம்பாவம் சிறிதுகூட இல்லாமலும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும்‌ செயல்கள் அனைத்தும் கர்மயோகமாகும்.

ஒவ்வொருவரும் தான் ஒரு கர்மயோகியா, செய்த கர்மவினைகளின் பயனாகச் செயல்படுபவரா அல்லது உலக இன்பதுன்பங்களுக்கு ஆட்பட்டுக்  கர்மங்களைப் புரிகிறாரா என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

மனிதர்கள் அனைவரும் எப்பொழுதும் ஏதோவொரு செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவற்றுள் அதிக அளவு சுயதேவைக்கான செயல்கள் இருந்தபோதிலும், சுயநலமற்ற பிறர் நலத்துக்கான செயல்கள் அடங்கியிருக்கவேண்டும்.
மனிதர்கள் அனைவரும் சுயநலமற்ற சேவையில் ஈடுபடவேண்டும்.

பிறருக்குப் பயன்படவேண்டும் என்பதற்காகவே இம்மனித உடலை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

சுயநலமின்றிச் சேவை புரியும்போது நமக்குள் இருக்கும் நமது தெய்வீகத் தன்மையை நம்மால் உணரமுடியும. எனவே இதயபூர்வமான  பரிபூரண  அன்புடன் பிறருக்கான சேவையைச் செய்யுங்கள்.

நீங்கள் யாருக்குச் சேவை செய்தாலும் நாம் வணங்கும் இறைவனுக்கே சேவை செய்வதாகக் கருதிச் செயல் புரிய வேண்டும். 

சத்திய சாயி சேவை நிறுவனங்களில் மாத்திரமே பரிபூரணமான, நான் செய்கிறேன் என்ற ஆணவ உணர்வற்ற சேவையைக் காணமுடிகிறது.

நான் என்ற அகம்பாவமற்ற சேவை தூய அன்புநிறைந்த இதயத்திலிருந்தே வெளிப்படுகிறது.
உங்கள் இப்பிறவிக்கான காரணம்  நீங்கள் செய்த கர்மவினைகளே. அனைவரும் குறிப்பிட்ட காரணத்துக்காகவே பிறவியெடுத்துள்ளனர்.

கரமவினையால் கிடைத்துள்ள இப்பிறவியுடன் தர்மநெறிகளும் சேர்ந்தே வந்துள்ளன.

மனினாகப் பிறந்துள்ள அனைவருக்கும் மனிதத் தன்மையே தர்ம நெறியாகும். 

மனிதத் தர்மம் என்றால் மனதில் உதிக்கும் எண்ணம், சொல்லும் வார்த்தை மற்றும் செய்யும் செயல்கள் என்பனவற்றின் ஒருங்கிசைவான திரிகரணசுத்தியாகும்.

மனதில் உதித்த எண்ணம் ஒருவரது சொல் மற்றும் செயலிலிருந்து வேறுபட்டால் அந்த மனிதப் பிறவி பயனற்றதாகிறது.

எனவே திரிகரணசுத்தியுடனான வாழ்வே உண்மையான மனித வாழ்வாகும்.

ஆனால் இன்றைய நிலையில் மனிதர்கள் தம்மைத்தாமே அறிவதற்குப்  பதிலாக வெளியுலகை அறிய முயற்சி செய்கின்றனர். தற்போது  வாழும் மனிதர்கள் தாங்கள் யார் என்பதையே அறியாமலிருக்கிறார்கள்.தான் யாரென்பதை அறிந்துகொள்ளாமல் வெளியேயுள்ள பிறவற்றை அறிந்துகொள்வதில் என்ன பயன் உள்ளது.

எனவே ஒவ்வொரு மனிதனும் தான் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

கர்மவினையென்றால்
 என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும். எப்படியான கர்மத்தை ஒருவர் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் புனிதமானதும் பிறருக்குப் பயனளிக்கக் கூடியதுமான செயல்களைச் செய்யவேண்டும்.

செய்யும் செயல்களனைத்தும் பிறருக்கு ஆனந்தமளிக்கக் கூடியனவாகவும் பிறருக்கு எவ்வித வேதனை அளிக்காதனவாகவும இருக்கவேண்டும். அச்செயல்கள் அவருக்கோ பிறருக்கோ வேதனை அளிக்காதவையாக  இருக்கவேண்டியது அவசியம். 

புராணங்கள் 18 ம் இதனையே வலியுறுத்துகின்றன. பிறருக்குப் பயனாக வாழ்வதே புண்ணியம் என்றும் பிறருக்குத் தீங்கிழைப்பது பாபமென்றும் இப்புராணங்கள் அனைத்தும் வலியுறுத்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால் 'எப்பொழுதும் பிறருக்கு உதவியாக இருங்கள், எவருக்கும் தீங்கிழைக்காதீர்கள்' என்பதே அவற்றின் சாரம்.

மேலும் ஒருவருக்கு நன்மை செய்யும்போது அச்செயலால் இன்னொருவருக்குத் தீங்கு விளையாதபடி அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு செய்யும் சேவையே பவித்திரமான சேவையாகும்.

எனவே இறைவனின் புனிதமான நாமத்தை மனதில்பதித்தபடியும்  உங்கள் தெய்வீகத்தன்மையை உணர்ந்தும் பல்வேறு பரோபகார சேவைகளைச் செய்வதன்மூலம் மனிதப்பிறவியெடுத்ததன் பரிபூரண பவனையடைய முடியும்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்









No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...