ஓம் ஸ்ரீ சாயி ராம்.
உலகில் நாம் காணும், செய்யும் மற்றும் அனுபவிக்கும் பல விடயங்களைப் பற்றியும் நமது எண்ணத்துக்கேற்ப புரியும் செயல்கள் பற்றியும் அவற்றால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் பற்றியும் நாம் மிக அவதானமாக இருக்கவேண்டுமென்றும், நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மநெறிப்படியானதா, இதனால் சமுதாயத்துக்கு நன்மை கிடைக்குமா, நமது செயலை இறைவன் அங்கீகரிப்பாரா என்றெல்லாம் ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும்.என்றும், மேலும் நாம் செய்யும் அனைத்தையுமே இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யவேண்டும் என்றும் நமது சாயிபகவான் நமக்கு அறிவுறுத்தி வருகிறார்.
நாம் கவனக்குறைவாகப் பாத அணியின்றி கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் நடந்துசென்றால், குத்திய பிறகுதான் முள் குத்திவிட்டது என்று தெரிகிறது. கல்லில் கால் தடுக்கியபிறகுதான கல் இருந்ததை உணர்கிறோம்.
வழுக்கி விழுந்த பின்னரே அது வழுக்கல் நிலம் என்று புரிகிறது.
சில சமயம் உண்டபின்தான் அது உறைப்பு என்று உணருகின்றோம்.
நாம் செய்யும் பவ செயல்களை மகிழ்ச்சியுடன் செய்ய ஆரம்பித்தபோதும் அவற்றின் விளைவுகள் சிலசமயங்களில் துயரத்தில் முடிவதை அவதானித்துள்ளோம்.
உலகவாழ்க்கையில் நாம் புரியும் பல விடயங்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும் போதிலும் இறுதியில் அதன் முடிவு துயரமாக இருப்பதனால் பலர் கலங்குவதுணடு.
மகிழ்ச்சிகரமானவை என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கும் பல உறவுகள் இறக்க முடியாத சுமைகளாக மாறுவதால் அவற்றிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கும் பலர் நம் மத்தியில் வாழ்கின்றார்கள்.
கால்கள், கைகள் எல்லாம் விலங்குகள் பூட்டப்பட்டுக் கழற்ற முடியாத நிலைபோன்ற சூழ்நிலையில், வாழவும் முடியாத, சாகவும் முடியாத குழப்பத்தில் வாழ்பவர்கள் ஏராளமாக உள்ளனர்.
பலர் இன்று துயரங்களின் மொத்த உருவமாகக வாழ்கின்றார்கள்.
நமக்குக் கிடைத்த இந்தப் பெறற்கரிய மனிதவாழ்க்கையை எப்படிப் பயன்படுத்துவது என்று மகான்கள் பலரும், இறைதூதர்களும், இவ்வுலகில் மனிதனாக அவதரித்த அவதாரபுருஷர்களும் தொடர்ந்தும் அறிவுரை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் அவற்றைக் கடைப்பிடித்து உய்வடையும் வழிகள் தெரிந்தும், மாயைநிறைந்த இவ்வுலக வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு மீட்சிபெற முடியாமல் பலரும் தவிக்கிறார்கள்.
உண்மைகளை அறிந்தும் அல்லது தெரிந்தும் அவற்றை உதாசீனம் செய்து துன்பத்தில் உழலுகிறார்கள்..
"நாப்பிளக்க பொய் பேசி
நவநிதியம் தேடி
நலமொன்று மில்லாத
நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற
புற்றீசல் போலப்,
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்,
காப்பதற்கும் வழியறியீர்,
கைவிடவும் மாட்டீர்,
கவர் பிளந்த மரத்துளையில்
கால் நுழைத்துக் கொண்டே, ஆப்பதனை அசைதிட்ட குரங்கு நிலைபோல.
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே "
என்று உலகவாழ்க்கையின் இன்னல் நிலையைப்பற்றிப் பட்டினத்தார் அழகாகப் பாடியிருக்கிறார்.
எனவே நாம் பிறந்த நோக்கத்தை உணர்ந்து நல்வழியில் வாழ்வோம்.
உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment