Friday, March 18, 2022

குடும்ப வாழ்விலிருந்தபடியே இறைவனை அடையும் வழி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

சதுர்யுகங்கள் எனப்படும் நான்கு யுகங்களில் கடைசியான கலியுகத்தில் மனிதவாழ்க்கை உலகவாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டு, சுயநலம், ஆணவம், அகங்காரம், கஞ்சத்தனம், பேராசை என்பன அதிகரித்துக் காணப்படுகிறது. 

அதனால் இயற்கை அனர்த்தங்களான பூகம்பம், சூறாவளி, ஆழிப்பேரலை போன்றவற்றாலும், கொரொணா போன்ற மனிதரால் ஏற்படுத்தப்படும் தொற்றுநோய்கள், அணு ஆயுத யுத்தங்கள் போன்ற மனிதரால் ஏற்படுத்தப்படும் செயற்கை அனர்த்தங்களாலும் மனித இனம் பாதிக்கப்படுகிறது.

முந்தைய யுகங்களிலும் போர் நடைபெற்றது. ஆனால் யுத்த நியதிப்படியே போர்கள் நடைபெற்றன‌. போர்கள் போர்க்களத்தில்தான் நடைபெற்றது.
ஆனால் கலியுகத்தில் நடைபெறும் யுத்தங்களில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். யுத்த களத்தில்தான் யுத்தம் நடைபெறும் என்ற வரையறை கைவிடப்பட்டு விட்டது.

முந்தைய யுகங்களில் கடவுளை அடைய நோன்புகள். துறவறம் போன்ற விஷயங்களில் ஈடுபடவேண்டியிருந்தது. ஆனால் கலியுகத்தில் நாமஸ்மரணம், பஜனை என்பன மூலமாக இலகுவாக இறைவனை அடையமுடியும். 

அதுமட்டுமன்றி துறவறத்தில் இருக்கக்கூடிய கடுமையான நெறிமுறைகளைக் கைக்கொள்ளாமலேயே சமுதாயத் தொண்டு புரிந்து, அதனையே இறைவனுக்குச் செய்யும் சேவையாக அர்ப்பணித்து இறைவனை மிக எளிதாக அடைந்துவிடலாம்.

சத்தியம், தர்மநெறிமுறை, அமைதி, அன்பு, அகிம்சை என்பவற்றைச் சிறிதும் சுயநல நோக்கமின்றிக் கடைப்பிடிப்பதன் மூலம் இறைவனின் அனுக்கிரகம் கலியுகத்தில் மிக எளிதாகக் கிடைத்து விடும் என்று சுவாமி பலமுறை தனது அருளுரைகள் மூலம் கூறியிருக்கிறார். 

தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகத் தியாகம் செய்வதன் மூலம் தமது சேவையை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும் சுவாமி சொல்கிறார். 

HANDS THAT SERVE ARE HOLIER THAN THE LIPS THAT PRAY என்று சுவாமி கூறுகிறார். 

அதாவது பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சமுதாயத்துக்குச் சேவை செய்யு கரங்களே புனிதமானவை என்பதே சுவாமியின் வாக்கு. 

தனி மனிதனுக்கு அளவற்ற ஆசைகள் இருக்கின்றன. ஆசைகளுக்கு வரம்பே கிடையாது. அளவும் கிடையாது. 

ஆனால் தமது ஆசைகளை நிறைவேற்றுவதில் முழு அளவில் ஈடுபடும் மனிதர்கள் தமது வாழ்நாளில் இன்பத்தையும், சுகத்தையும் சாந்தியையும் அனுபவிப்பதே இல்லை. 

அவர்கள் சுக துக்கங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். அவர்கள் தம்மை  உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றால், அளவுகாகுமீறிய ஆசைகளையும் பற்றுக்களையும் கைவிடவேண்டும். 

சாதாரண உலக வாழ்க்கையில் துறவறத்தை எப்படிக் கடைப்பிடிக்க முடியும் என்பதையும் பகவான் HANDS IN THE SOCIETY AND HEADS IN THE FOREST என்று கூறுகிறார். 

நாம் குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதிலும், நமது சிந்தனை, இறைவன் மீதே இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். 

தாமரை தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தாமரை இலையில் தண்ணீர் சிறிதளவுகூட ஒட்டிக்கொள்வதில்லை. அதேபோல குடும்பம் மற்றும் உலக இன்பங்களுக்கு மத்தியில்
 வாழ்ந்து கொண்டே பற்றற்ற ‌வாழ்வை நம்மால்  கடைப்பிடிக்க முடியும் என்று சுவாமி நமக்கு வழிகாட்டுகிறார்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...