Sunday, April 3, 2022

ஏழைகள் தரித்திர நாராயணர்கள். அவர்களை உபசரிப்போர் லக்ஷ்மி தேவியின் அருளைப்‌பெறுகிறார்கள்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

"ஒரு பழத்தை நமது நாக்கால் சுவைக்காமல் அது இனிமையானது எனக் கூறமுடியாது.
அதேபோல் ஒரு மனிதனின்  நடத்தையை  ஆராயாமல் அவரை நல்லவர் என்று கூறமுடியாது.
எனவே இனிய கனியின் ‌இன்சுவையைச் சுவைக்க விரும்பாத மற்றும் நன்நடத்தை இல்லாத மனிதர்களைப் புலிபோன்ற கொடிய மிருகங்களென்றே கருதவேண்டும். 
அன்பு இல்லாத, அமைதியில்லாத ஒரு மனிதனின் இதயம் கொடிய பாலைவனத்துக்கு ஒப்பானதாகும். உண்மையில் இதயத்தில் அன்பற்ற மனிதர்கள் மனிதர்களேயல்லர்.

சத்தியம், அன்பு மற்றும் நற்பண்புகள் இல்லாதவர்களை மனிதர்கள் என்றே கூற முடியாது. இதனால்தான் நமது சாயிபகவான் நம்மை அன்பின் திருவுருவங்களே என்றும் தெய்வீக வடிவங்களே என்றும் அழைக்கிறார்

கலியுகத்தில் நாமஸ்மரணையும் பஜனையும் நம்மை இலகுவாக இறைவனிடம் இட்டுச் செல்லும்‌ மார்க்கம் என்று பகவான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள்கூட சமுதாயத்துக்குப பயனளிக்கக் கூடிய தம்மால் இயன்ற தொண்டுகளைப் புரிந்து இறைவனின் திருவருளைப் பெறமுடியும் என்று எடுத்துரைக்கும் எம்பிரான் , துறவறம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடத் தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கெனத் தம்மாலான தியாகங்களைச் செய்து தம்மைப் புனிதப்படுத்தி இறைவனிடம் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும்,. HANDS THAT SERVE ARE HOLIER THAN THE LIPS THAT PRAY , 

அதாவது, ஜபம் தியானம் போன்றவற்றைவிடக் கஷ்டப்படுபவர்கள், பசியால் மற்றும் குளிரால் வாடும் ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகள் கொடுத்து அவர்களின் துயரஙளைப் போக்குவதே இறைவனுக்குச் செய்யும் சேவையாகும் எனவும சுவாமி கூறுகிறார்.

பகவான் தனது அருளுரைகளில் ஏழைகளைத் தரித்திர நாராயணர்கள் என்றே குறிப்பிடுகிறார். அவர் ஏழைகளை நாராயணர்கள் என்று குறிப்பிடும்போது, நாராயணனை விட்டு லக்ஷ்மிதேவி ஒருபொழுதும் பிரிந்திருக்கமாட்டாரென்றும் எனவே நம்மிடம் உதவிகோரி வரும் தரித்திர நாராயணர்களை வரவேற்று உதவும் பொழுது அவர்களுடன் கூட வந்திருக்கும் லக்ஷ்மிதேவியும் உங்களால் உபசரிக்கப்பட்டு, மனம் மகிழ்ந்து நம்மீது தனது அருள் மழையைப்‌பொழிவார் என்றும் எடுத்துரைக்கிறார்.

எனவே லக்ஷ்மி கடாட்சம் தேவையானால் தரித்திர நாராயணர்களை வரவேற்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரியவேண்டும்.


தனி மனிதனுக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆசைகளுக்கு வரம்பு கிடையாது. அளவும் கிடையாது. ஆனால் ஆசைகளின்ன் பின்னே ஓடுகின்ற ஒரு மனிதன் தனது வாழ்நாளில் இன்பத்தையும், சுகத்தையும் சாந்தியையும் அனுபவிப்பது இல்லை. 

அவன் சுக துக்கங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்றால், அளவுக்குமீறிய ஆசைகளைக் களையவேண்டும். கரங்கள் வீட்டிலும் சமூகத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அதே வேளை சிந்தனையும் மனமும் இறைவன்மீது இருக்கவேண்டும். 
எந்த வேலையைச் செய்தாலும் அதனை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்கிறோம் என்ற  மனநிலையுடன் செயல்பட்டால் குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே இறைவனின் அனுக்கிரகத்தை நம்மால் பெற‌ முடியும் என்று சுவாமி  நமக்கு
வழிகாட்டுகிறார். 

மனிதனுடைய வாழ்வில் நான்கு நிலைகள் இருக்கின்றன. பிரம்மச்சரியம், சம்சாரம், வானப்பிரஸ்தம் சன்னியாசம் என்பனவே அவை. 

இவைகளில் சம்சார நிலை தவிர மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்கள் பணத்தைக் கையாளக்கூடாது என்பது சனாதன தர்மத்தின் வழக்கமாகும். 

குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்களை அரவணைத்து ஆதரவளித்து அவர்களைப் பேணவேண்டும் என்று சொல்கிறார்கள். 

ஆனால் சுவாமி இதனிலும் மேலாக,  சமூகத்தில் இருப்போர் மற்றும் சமுதாயத் தொண்டு புரிவோர இறைவனுக்குத் தொண்டுபரிகிறோம் என்ற  மனநிலையுடன் நடந்துகொண்டால் மனித வாழ்க்கையின் பயனை அடையலாம் என்று விளக்குகிறார்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...