Thursday, April 7, 2022

இறைவனின் படைப்பில் அனைத்தும் நல்லவையே எனக் கூறும் எம்பிரான்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

இவ்வுலகிலுள்ள அனைத்தும் இறைவனின் படைப்புக்களே. இறைவன் தனது படைப்பில் எதனையும் நன்மையானது தீமையானது எனப் பாகுபடுத்திப் படைக்கவில்லை.

நாம்தான்‌ நல்லது கெட்டது எனப் பாகுபடுத்திப் பார்க்கிறோம் 

இதனையே நமது சாயிபகவான் தனது சிருஷ்டியில் எவ்வித குறையுமில்லை, மனிதர்களின் திருஷ்டியில்தான், அதாவது மனிதர்கள் பார்க்கும் பார்வையிலதான் தவறு உள்ளது என்று கூறுகிறார்.

மகாபாரதத்தில் நடைபெற்ற ‌ஒரு நிகழ்வை பகவான் இது தொடர்பாக நமக்கு ஞாபகப்படுத்துகிறார்.

ஒருதடவை கண்ணபிரான் துரியோதனனை அழைத்து ஹஸ்தினாபுரத்தில் உள்ள நல்லவர்களைப்பற்றிய விபரத்தை அறிந்துவரும்படி அனுப்பினார். நகர்முழுவதும் தேடியும் அவனால் ஒரு நல்லவர் இருப்பதாகக்கூட அறிய முடியவில்லை.

எனவே கண்ணபிரானிடம் திரும்பி வந்து, நாட்டில் ஒரு நல்லவர்கூட இல்லையென்றும், தான் ஒருவனே ஹஸ்தினாபூரத்திலுள்ள ஒரேயொரு நல்லவன் என்றும் கூறினான். 

இதனைக் கேட்ட கண்ணபிரான் புன்முறுவலுடன் தருமராஜரை அழைத்து ‌ஹஸ்தினாபுரத்தில் யாராவது கெட்டவர்கள் இருக்கிறார்களா என அறிந்துவரும்படி அனுப்பினார்.

நாடுமுழுவதும் சுற்றயபடி கெட்டவர்கள் யாராவது ஹஸ்தினாபுரத்தில் இருக்கிறார்களா எனத் தேடினார் தர்மராஜன். அவரால் நாட்டில் ஒரு கெட்டவரைக்கூடக் காண முடியவில்லை.

எனவே கண்ணபிரானிடம் வந்து  நாட்டில் ஒரு கெட்டவர்கூட இல்லையென்று கூறினார்.
இதனைப் பார்த்த பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் துரியோதனனின் பதிலிலும், தருமரின் பதிலிலும்‌உள்ள வேறுபாட்டின் அர்த்தத்தை கண்ணபிரானிடம் வினவினார்கள்.

அதற்குக் கிருஷ்ணபிரான், திருதராஷ்டிரனின் மனதில் தீய குணங்களே நிறைந்துள்ளதால் அவனது திருஷ்டியிலுள்ள தவறின் காரணமாக அனைவரும் அவனது கண்களுக்குத் தீயவர்களாகத் தெரிந்ததாகவும், தருமராஜனின் மனம் எப்பொழுதும் தர்மநெறியிலேயே ஈடுபட்டிருப்பதால் அவரது பார்வையில் நாட்டிலுள்ள அனைவரும் நல்லவர்களாகத் தெரிவதாகவம் வினக்கமளித்தார், 

மேலும், நல்லவர்களின் பார்வையில் அனைவரும் நல்லவையாகவே‌ தெரிவதாகவும், தீயவர்களின் பார்வையில் அனைத்தும் கெட்டதாகவே தெரிவதாக் கூறிய நமது சாயிநாதன், இறைவன் படைத்த அனைத்தும் நல்லவையே என்றும், அவரவர் அவற்றைப் பார்க்கும் மனநிலைக்கேற்பவே இறைவனால் படைக்கப்பட்டவை நல்லதாக அல்லது கெட்டதாகத் தெரிவதாகவும், தவறு இறைவனின் சிருஷ்டியிலல்ல என்பதையும் ஒருவரது திருஷ்டியே இறைவனின் படைப்பைத் தீயதாகக்‌ காட்டுவதாகவும் கூறினார்

எனவே நன்மையோ அன்றித் தீமையோ - எதுவானாலும் நமது நடத்தையைப் பொறுத்தே அமைவதாகவும். இவ்வுலகம் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் நமது நடத்தையும் ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டுமென்றும்,  இவ்வுலகத்திற்குத் தற்போதய தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல் ஒழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான் என்றும் கூறுகிறார்.

மேலும்,  சரியான வழிமுறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகுமானால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியும் சமாதானமும் இருக்காது என்றும் சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவர்களே உண்மையான மனிதர்கள் என்றும் எடுத்துரைப்பதுடன்,

"சத்தியம் என்பது நீதி, தர்மம் என்பவை, ரீதி, தியாகம், க்யாதி. இவை மூன்றும் சேர்ந்ததே மானவஜாதி. (மனித குலம், இந்த மனித குலம் சத்தியத்திலிருந்து உருவாயிற்று, இந்தப் படைப்பு அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது, சத்தியம் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை, இந்தத்தூய கலப்பற்ற உண்மையை அனைவரும் புரிந்து கொண்டு இதனை ஆதாரமாகக் கொண்டு உண்மையையே பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள், என்று அறிஞர்களும், ஞானிகளும் கூறிவருகிறார்கள். 

 'ஸத்யம் ப்ருயாத்' என்பது நேர்மை என்னும் குணநலனைக் குறிப்பிடுகிறது. மானவ ஜாதி (மனித குலம்), நீதி (நேர்மை, ஒழுக்கம்) இன்றி வாழ முடியாது. அநியாயம். பொய்மை. அதர்மம். இவற்றால் எல்லாம் சூழப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குண நலன்களை மீட்டு வந்து மீண்டும்  நிலை நாட்ட இளைஞர்களாலும். யுவதிகளாலும் மட்டுமே முடியும். மனிதன் நேர்மையைப் போற்றி அதன் வழி நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகியவை சமுதாயத்தில் நிலவும். 

நேர்மையைத் தன் வழிமுறையாகக் கொள்ள வேண்டுமானால் மனிதன் சத்தியத்தின்படி நடக்க வேண்டும். இதனால் தான் ‘சத்தியம் ப்ருயாத்’ எனக் கூறுகிறார்கள். இது தான் மனிதனின் தலையாய கடமை. இரண்டாவது ‘ப்ரியம் ப்ருயாத்’ (இனிமையாகப் பேசுங்கள்). இது தர்மம் என்னும் குண நலனைக் குறிக்கிறது. 

இதை அடிப்படையாகக் கொண்டுதான் பகவத் கீதையில் “சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள், உங்களது பேச்சு. மற்றவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிடுவதாக அமையக் கூடாது, ஆன்மீகக் குண நலனைக் கடைப்பிடிக்கவேண்டும், ஆன்மீகப் பாதையில் செல்ல இந்தக் குணநலன்களை மனிதன் கைக்கொள்ள வேண்டும்" என்று சொல்லப்பட்டுள்ளது" என்று பகவான் தனது அருளுரைகளில் வலியுறுத்தி வருகிறார்.

நாம் அனைவரும் பகவானின் அருள்வார்த்தைகளின்படி நடந்து உய்வடேவோம்.

உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ ‌சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...