Thursday, March 3, 2022

நன்நடத்தையின் முக்கியம் பற்றி சாயிநாதனின் அருளுரை.

நன்நடத்தை என்பது ஒரு முக்கியமான பண்பாகும்.  பாண்டுமகாராஜாவின் நற்பண்புகளும்  தியாகமுமே திருதராஷ்டிரனுக்கு அரியணையில் அமரும் பாக்கியத்தை அளித்தது. பாண்டுவைக் கானகத்தில் வாழத்தூண்டியது.

அதேவேளை திருதராஷ்டிரனின் பேராசையும் அளவுக்கு மீறிய புத்திர பாசமும் தனது புதல்வர்களின் தீய நடத்தைகளையும் ஆவர்களது பேராசையையும் வளரச்செய்தது மாத்திரமன்றி மகாபாரத யுத்தத்துக்கு வழிவகுத்து குருவம்சத்தையே பூண்டோடு அழித்து விட்டது. 

மனதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்‌ சூட்சும பாரதத்தில் தியாகம் என்பது மிக அரிதாகவே காணப்படுகிறது.

நமது மனம் எல்லாவிதமான நற்பண்களும் நிறைந்தது. நல்ல பண்புகளும் வளங்களும் உள்ளது. எல்லாத் தர்மங்களும் உள்ளன. ஆனால் மனிதரிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் அந்த நல்ல குணங்கள் பயனற்றுப் போய் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வது மாத்திரமன்றி ஒருவரைஒருவர் அழித்துக் கொள்ளும் நிலமைக்கும் தள்ளப்படுகிறார்கள். எனவே நாம் நம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். 

ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே மானுட இனத்தைச் சேர்ந்தவர்கள். மனித இனத்தினுள் மிருகத்தன்மைக்கு இடமில்லை. எனவே நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வது மிகவும் அவசியம். நாம் அடுத்வருடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நமது கஷ்டங்களாகவே கருதவேண்டும். 

மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிப்பதாகக் கற்பனை செய்துபார்த்தாலே துன்பத்தின் கொடூரத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, 
சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ்ந்தால்  உலகில் சமாதானம் நிலவுவது நிச்சயம்.

சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். 

சமுதாயத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்துதான் வாழ்கிறார்கள். எல்லாருடைய நடத்தைகளயும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. 

நாம் நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி  சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சை ஆகிய வழிகளில் பிறருக்கு ஒரு உதாரண. புருஷராக நடந்துகொண்டால் நம்மைப் பார்த்துச் சிலராவது திருந்தி நடக்கும் வாய்ப்பு ஏற்படும்.

 சமுதாயத்திலுள்ள அனைவரும் நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கித் தள்ளவேண்டும். யராவது தீங்கு செய்தால் பதிலுக்கு அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். 

உதவிசெய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதில் உள்ள இன்பத்தை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமையும் அதிக இன்பமும் இருக்கிறது.

தீமைசெய்து துன்பத்துக்கு ஆளாக்கியவர்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற உயர்ந்த மன நிலையுடன் மனிதர்கள் வாழப்பழகிவிட்டால் யாராவது நமக்குத் துன்பம் செய்தாலும் அதனால் கலகம் விளையாது., 

எனவே அனைவருக்கும் நன்மை செய்வதே நமது கொள்கையாக இருக்கவேண்டும். 

நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். நம்முடைய உணர்வுகள் நல்லவையாக இருந்தால் நமது செயல்களும் நல்லவையாகவே இருக்கும். மனம் நல்லதாக இருந்தால் சொல்பவை, நினைப்பவை, செய்பவை எல்லாமே தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும் 

இக்கருத்துக்களை நமது கண்கண்ட தெய்வமான சாயிநாதன் தனது அருளுரைகளில் வலியுறுத்தி வருகிறார்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...