எதிரணியில் தம்மையெதிர்த்துப் போர்புரியத் தயாராக இருந்த அனைவரையும் பார்வையிட்டபின் காண்டீபத்தை நழுவவிட்டுத் தேர்த்தட்டில் உடகார்நாதிருந்த அருச்சுனனைப்பார்த்துக் கண்ணபிரான் கேட்டார், "அர்ச்சுனா, நீ இதுவரை எத்தனை போர்களில் ஈடுபட்டு எத்தனைபேரைக் கொன்றிருக்கிறாய். அப்போது வராத தயக்கம் தற்போது ஏற்பட்டதற்கான காரணத்தை யோசித்துப் பார். இதுவரை உன்னால் கொல்லப்பட்ட அனைவரும் உனது உறவினர்களல்லவென்றும், தற்போது உன்னை எதிர்த்து நிற்போர் உனது உறவினர்களும் உன்னால் பூசிக்கப்பட வேண்டியவர்கள் என்னும் மாயையும் உன்னை மயக்குவதால் போரிலிருந்து பின்வாங்க நினைக்கிறாய். யார் உனது உறவினர்? யார் உனது மரியா தைக்குரியவர்கள்?
நீ இப்போது போர் புரியவிருப்பது அநீதிக்கெதிராகவே. அநீதியை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டுவதே உனது கடமை. எனவே துணிவுடன் எழுந்து போரிடு" என்றும் தூண்டினார்.
அப்போது தர்மத்தின் வடிவமான தருமருக்கோ, வீரத்துக்கும் பலத்துக்கும் வடிவமானவனும் தனது கதாயுதத்தின் ஒரேவீச்சில் எதிரிகளைத் துவம்சம் செய்யும் பராக்கிரமம் கொண்ட பீமசேனனுக்கோ அன்றி சகல அறிவும் பெற்ற பிதாமகரான பீஷ்மருக்கோ உபதேசிப்பதைத் தவிர்த்து கீதோபதேசத்தை பகவான் தனக்கு ஏன் வழங்குகிறார் என்னும் சந்தேகம் அருச்சுனனின் மனதில் எழுந்தது.
பிதாமகர் பீஷ்மர் சகல தர்மங்களை அறிந்திருந்தாலும், பாரதப்போரில் அநீதியின் பக்கத்துக்கே தலைமை தாங்குகிறார். அவரது குரலும் எண்ணமும் தர்மத்தைச் சார்ந்து இருந்தாலும் அவரது செயல் அதர்மத்துக்கே துணை நிற்கிறது. எனவே அவர் திரிகரண சுத்தியை இழந்து விட்டார். எனவே கீதோபதேசத்தைப் பெறும் தகுதியையும் உரிமையையும் அவர் இழந்து விட்டார்.
தருமராஜன் தர்மத்தைக் கடைப்பிடித்த போதிலும் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் செயலாற்றி விட்டுப் பச்சாத்தாபப் படுபவர்.
திருதராஷ்டிரன் கபடத்தனமாகச் சூதாட அழைத்தபோது, சூதாட்டம் தர்மத்துக்கு முரணானது என்று நன்கு அறிந்திருந்தும் சூதாடச் சம்மதித்தவர்.
அதுமட்டுமல்லாமல், தனக்குப்பதிலாகச் சூதாட மாமன் சகுனியைத் துரியோதனன் நியமித்தபோதிலும் , சூதாட்டத்தில் திறமையற்ற தர்மராஜர், கண்ணபிரான் சூதாட்டத்தைப் பற்றி அறிந்துவிடக்கூடாதென்றும், அவர் சூதாட்டத்தில் தலையிட்டுவிடக் கூடாது என்றும் மனதில் நினைத்திருந்தார். கண்ணபிரான் சூதாட்ட மண்டபத்தின் வெளியே தர்மராஜனுக்கு உதவ அவரது அழைப்புக்காகக் காத்திருந்த போதிலும் சூதாட்ட மண்டபத்துக்குள் பகவான் நுழைந்துவிடக்கூடாது என்றே தருமர் நினைத்துக் கொண்டிருந்தார்.
எனவேதான் கண்ணபிரானின் உற்ற தோழனும், மைத்துனனும் பரம பக்தனுமான அருச்சுனனைக் கீதோபதேசம் பெறும் தகுதியுள்ளவராக் கண்ணபிரான் முடிவெடுத்து இருந்தார்.
ஓம் சிறி சாயி ராம்.
No comments:
Post a Comment