Friday, January 1, 2021

வெறும் கைகளுடன் என்னிடம் வாருங்கள், உங்கள் கைகளை எனது அருளால் நிறைத்து அனுப்புகிறேன் என்று இறைவன் கூறுகிறார்.

யாராவது நமக்கு உதவிசெய்தால் அல்லது அவர்கள் நம்மிடம் பேசினால், எப்படியிருக்கிறீர்கள், மிக்க நன்றி என்று பதிலளிக்கிறோம். கீழே விழுந்த நமது கைக்குட்டையை யாராவது எடுத்துக் கொடுத்தால், மிக்க நன்றி என்று கூறுகிறோம். ஏரியிலிருக்கும் தண்ணீரை நம் வீட்டுக்கு வினியோகித்ததற்காக, நாம் தண்ணிர் வரி செலுத்துகிறோம். அதைப்போலவே மின்சாரத்துக்கும் மின்கட்டணம் செலுத்துகிறோம். நாம் வாங்கிய நிலத்தில் நாம் ஒரு வீடு கட்டிக்கொண்டால், அதற்கும் வீட்டுவரி செலுத்துகிறோம். காற்றைப் பெறுவதற்கு ஒரு மின்விசிறியைப் பயன்படுத்தினால் அதற்கு மின்கட்டணம் செலுத்துகிறோம். தண்ணீரை உபயோகப்படுத்தினால் தண்ணீர் வரி செலுத்துகிறோம். தடையில்லாமல் நமக்குக் காற்றையளிக்கும் இறைவனுக்கு என்ன நன்றி செலுத்துகிறோம். இறைவனுக்கு என்ன வரி செலுத்துகிறோம். சூரியன் உலக்குக்கு வெளிச்சத்தத் தருகிறது. அந்தச் சூரியனுக்கு என்ன வரி செலுத்துகிறோம். ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதையும் நாம் எடுத்துப் பயன்படுத்துகிறோம். இப்படி நீரை வழங்கும் இறைவனுக்கு நாம் என்ன வரியைச் செலுத்துகிறோம். அற்பமான சாதரணமான விஷயத்துக்கெல்லம் நாம் வரி செலுத்துகிறோம். கடவுள் அருளும் அனைத்துமே இலவசம். காற்று இலவசம். நீரும் இலவசம். வெளிச்சமும் இலவசம், ஒலியும் இலவசம். இறைவன் அனைத்தையும் இலவசமாகவே கொடுக்கிறார். இந்தப் பூமி இறைவன் அருளியதே. அதில் சிறுபகுதியைப் பயன்படுத்தும் போது அதற்கும் வரி செலுத்துகிறோம். பஞ்சபூதங்களும் இறைவனின் வடிவங்களே. இறைவனுடைய அருளைப்பெற்றுக்கொண்டு அதனை அனுபவித்துக்கொண்டிருக்கும் நாம் அந்த இறைவனுக்கு என்ன வரி செலுத்துகிறோம். அதைக்கொடுக்கவில்லையே, இதைக்கொடுக்கவில்லையே என்று கடவுளயே குறை கூறுகிறோம். கடவுள் கொடுத்தவற்றுக்கே நன்றி இல்லாதவர்களாக இருக்கிறோம். அப்படியிருக்கக் கடவுள் இன்னும் கொடுக்கவில்லையே என்ற எண்ணம் எவ்வளவு கீழ்த்தரமானது. உண்மையில் மனிதன் திருப்தி உள்ளவனாக வாழவேண்டும். இறைவன் நமக்காக எத்தனை தான் அருளியிருக்கிறார். இந்தக் காடுகளைப் படைத்து இந்தமரங்களின் மூலமாகப் பிராண சக்தியை அதாவது ஒக்சிஜனை அருளியிருக்கிறார். மனிதன் மூச்சுக்காற்றின் மூலம் வெளியிடும் கரியமில வாயுவை, அதாவது காபன் டை ஒக்சைட்டை இந்த மரங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இதனால் காற்று மாசு கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றை அருளிய கடவுளுக்கு நாம் செலுத்தும் வரியையே நம் முன்னோர்கள் பலி என்று கூறினார்கள். பலியென்றால் ஒரு உயிருள்ள உடலை இறைவனுக்குப் பலிகொடுப்பது என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. பலியென்றால் எந்த உயிரையும் துன்புறுத்துவது அல்ல. பலி என்றால் வரி என்றுதான் அர்த்தம். நம்முடைய நன்றியுணர்வை இறைவனுக்குத் தெரிவிப்பதே நாம் இறைவனுக்குச் செலுத்தும் வரியாகும். அத்துடன் நாம் கடைப்பிடிக்கும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை அகிம்சை, தியாகம் என்பனவும், பிறருக்குச் செய்யும் சுயநலமற்ற உதவியும், ஆழ்ந்த பிரார்த்தனையும் இறைவனுக்கு நாம் செலுத்தும் வரியாகும். துன்மார்க்கம் மற்றும் தீயசக்திகளை அழித்து நம்மிடையே நற்சக்திகளை வளர்த்துக்கொள்வோம். வெறும் கைகளுடன் என்னிடம் வாருங்கள், உங்கள் கைகளை எனது அருளால் நிறைத்து அனுப்புகிறேன் என்று இறைவன் கூறுகிறார்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...